×

திருவாரூரில் கடந்த 3 ஆண்டுகளில் ₹33.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 ஆயிரத்து 716 பயனாளிகளுக்கு ரூ.33 கோடியே 96 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகள், பெண்கள், மாணவ, மாணவிகள் என பலருக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளரசெய்து சமூதாயத்தில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்ற வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3ம் பாலினத்தவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திருநங்கைகள் என்று பெயர் சூட்டியதை போன்று ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை மாற்றுதிறனாளிகள் என்று மறைந்த முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.

அவரது வழியில் திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுதிறனாளிகளின் முன்னேற்றத்திற்கு தனிகவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, 21 வகையான மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மனவளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 709 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ.ஆயிரத்து 500 வீதம் உதவிதொகை – வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு மானியத்துடன் கூடிய வங்கிகடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 5 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மதியம் ஊட்ட சத்து சத்துணவு வழங்கும் திட்டம் மற்றும் 6 வயது வரை உள்ள மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான மற்றும் காது கேளாதவர்களுக்கான ஆரம்பகால பயிற்சி மையமும் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பெட்ரோல் ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, கருப்பு கண்ணாடி, பார்வையற்றோருக்கான கைகடிகாரம் மற்றும் பிரெய்லி மூலம் வாசிக்கும் கருவி, ஊன்றுகோல், செயற்கை கை, கால்கள், காதோலி கருவி, இலவச தையல் இயந்திரம் உட்பட மொத்தம் 18 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமின்றி இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஏற்கனவே பட்டா வைத்திருப்பவர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைத்திட ரூ 50 ஆயிரம் மானியம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டமும், 15 நாட்களுக்கு ஒருமுறை கோட்டம் அளவில் ஆர்.டி.ஓக்கள் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுதிறனாளிகளுக்கான நலவாரியமும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 ஆண்டு காலத்தில் இதுவரையில் மாற்றுதிறானாளிகள் துறையின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 716 பயனாளிகளுக்கு ரூ.33 கோடியே 96 லட்சத்து 17 ஆயிரத்து 835 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் கடந்த 3 ஆண்டுகளில் ₹33.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Collector ,Charu ,Tiruvarur district ,Tamil Nadu ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த...