×

கோழிக்கோட்டில் மீண்டும் பரவியது கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி: ஒன்றிய சுகாதாரக் குழு விரைகிறது

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்த 2 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த நோய் பாதித்து இந்த மாவட்டத்தில் மட்டும் 17 பேர் மரணமடைந்தனர். அடுத்தடுத்து பலர் மரணமடைந்ததால் கேரளாவில் அப்போது இந்த நோய் பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஒன்றிய மற்றும் கேரள அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளின் பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிபா வைரஸ் காய்ச்சலை மையமாக வைத்து மலையாளத்தில் வைரஸ் என்ற சினிமா வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்நிலையில் கடந்த முறை நிபா வைரஸ் காய்ச்சல் பீதியை ஏற்படுத்திய அதே கோழிக்கோடு மாவட்டத்தில் தற்போது மீண்டும் இந்நோய் பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கோழிக்கோடு அருகே உள்ள மருதோங்கரை பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஒருவர் காய்ச்சல் பாதித்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் கடந்த மாதம் 30ம் தேதி இவர் மரணமடைந்தார். இவருக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கான சில அறிகுறிகள் காணப்பட்டன. இதனால் இவரது உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நபர் சிகிச்சையில் இருந்தபோது கோழிக்கோடு அருகே உள்ள திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நோயாளியின் மகனும் அந்த மருத்துவமனைக்கு தந்தையுடன் வந்திருந்தார்.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இவர் மரணமடைந்தார். இவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவரது ரத்த மாதிரி பூனாவிலுள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே முதலில் மரணமடைந்தவரின் 9 மற்றும் 4 வயதான 2 மகன்கள் உள்பட அவரது உறவினர்கள் 4 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. இதனால் இவர்களும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, முதலில் பலியான 2 பேரின் உமிழ்நீர் மாதிரி புனேவுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவு நேற்று மாலை வெளியானது. அந்த 2 பேரின் மரணத்திற்கு நிபா வைரஸ் தான் காரணம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவ்யாவும் உறுதி செய்துள்ளார். கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒன்றிய சுகாதாரக் குழு கேரளா வருகிறது.

*முக கவசம் கட்டாயம்
2018ம் ஆண்டு கோழிக்கோட்டில் நிபா பரவியபோது மருத்துவமனை வருபவர்களுக்கும் மருத்துவ மனையில் இருந்த ஊழியர்கள் அனைவருக்கும் முக கவசமும், கவச உடையும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பரவுவதால் கோழிக்கோடு மாவட்டத்தில் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

The post கோழிக்கோட்டில் மீண்டும் பரவியது கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி: ஒன்றிய சுகாதாரக் குழு விரைகிறது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Union Health Committee ,Thiruvananthapuram ,Kozhikott ,Kerala State ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது