×

ரூ.279 கோடி மோசடியில் ராஜமுந்திரி சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு

திருமலை: ஆந்திராவில் ரூ.279 கோடி நிதி மோசடியில் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைக்க தாக்கல் செய்த மனுவை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் ரூ.279 கோடி நிதி மோசடி நடைபெற்ற குற்றச்சாட்டில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிஐடி போலீசாரால் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இமபிந்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் தனி பிளாக்கில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து என நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் வீட்டு காவலில் வைக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிஐடி தரப்பு வாதத்தையும் கேட்டு சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைக்க அனுமதி தர முடியாது என கூறி அந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது மகன் லோகேஷ், மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராமினி ஆகியோர் நேற்று பார்வையாளர் சந்திப்பு நேரத்தில் சென்று சந்தித்தனர்.

பின்னர் சிறைக்கு வெளியே சந்திரபாபு மனைவி புவனேஸ்வரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சந்திரபாபு எப்பொழுதும் மக்கள் நலன் குறித்தும் ஆந்திராவை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என சிந்தனையில் இருக்கக்கூடியவர். எப்பொழுதும் மக்களுக்காகவும் மக்கள் உரிமைக்காக அவர் பேசி வருவார். இந்நிலையில் எந்தவித தவறும் செய்யாமல் தற்பொழுது அவரை கைது செய்துள்ளனர். அவர் கட்டிய சிறை கட்டிடத்திலேயே அவரை அடைத்துள்ளனர். சிறையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தினருக்கு இது கஷ்ட காலம். இதிலிருந்து வெளியே வருவோம் என்றார்.

The post ரூ.279 கோடி மோசடியில் ராஜமுந்திரி சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Rajahmundry ,Tirumala ,Former ,Chief Minister ,Andhra ,Dinakaran ,
× RELATED சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு!