திருவள்ளூர்: விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது, குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், ஆவடி காவல் துணை ஆணையர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ஹஷ்ரத் பேகம் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுச்சூழல், சட்டம் -ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு சிலைகளை நிறுவவும், சிலைகளை கரைக்கவும் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்துள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை நிறுவ முன்கூட்டியே உரிய அனுமதியை காவல் உதவி ஆணையர்கள், சப் – கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலர்களிடம் சிலை வைக்க விரும்பும் நபர், அமைப்பாளர் உரியபடிவத்தில் (படிவம்-1) அனுமதி பெற மனு செய்யும் பொழுது நில உரிமையாளர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுதல் வேண்டும். அரசு நிலமாக இருப்பின் உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை அல்லது சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து தடையில்லா சான்று, காவல் துறையின் தடையில்லா சான்று, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் தடையில்லா சான்று, மின் இணைப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதற்கான கடிதம் மற்றும் தற்காலிக மின் இணைப்பு தொடர்பான மின்வாரியத்தின் தடையில்லா சான்று போன்ற தடையில்லா சான்றுகளுடன் காவல் உதவி ஆணையர்கள், சப் – கலெக்டர்கள், வருவாய் கோட்ட அலுவலர்களிடம் மனு செய்ய வேண்டும். மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து, உரிய அனுமதி, படிவம் 2ல் அலுவலர்களால் வழங்கப்படும்.
விநாயகர் சிலைகள் ரசாயனக் கலவையற்றதுமாக இருத்தல் வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப்படக் கூடாது. விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடத்தில் அமைக்கப்படும் தற்காலிக கூடங்கள் எளிதில் தீப்பற்ற கூடியதாக இருத்தல் கூடாது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் ஏதும் அருகாமையில் இருத்தல் கூடாது. வழிபாட்டிற்காக நிறுவப்படும் விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் இருத்தல் கூடாது. ஒலிபெருக்கி பயன்படுத்த காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் பூஜை சமயத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்க இயலும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி கூடாது. விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் எந்த ஒரு காரணத்தை கொண்டும், மற்ற மதத்தினை பாதிக்கும் வகையிலான முழக்கங்கள், விளம்பரங்கள் கூடாது. பொது இடத்தில் நிறுவப்பட்ட சிலைகள் நிறுவப்பட்ட 5 தினங்களுக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் கரைக்கப்பட வேண்டும் என்றார்.
The post அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை விநாயகர் சிலைகள் நிறுவ வழிகாட்டு நெறிமுறைகள்: 10 அடி உயரத்திற்கு மேல் இருக்க கூடாது appeared first on Dinakaran.
