கிறிஸ்துவம் காட்டும் பாதை
(எண்ணிக்கை 27:1-11)
ஒரு சமூகம் சில நல்ல சட்டங்களையும், முன்னேற்றமான சட்டங்களையும் கொண்டுள்ளது என்றால், அது தானாக நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக, அச்சட்டங்களின் உருவாக்கத்திற்குப் பின் பலருடைய குரல், உழைப்பு, போராட்டம் மற்றும் உயிரிழப்புகள் காரணமாக உள்ளது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
அதற்குப் பல பெண்கள் மற்றும் சமூக அக்கறையுடையோர் குரல் கொடுத்தும், அயராமல் போராடியும், அவமானங்களைச் சந்தித்தும் மற்றும் உயிரிழந்தும் உள்ளனர் என்பது உண்மை. அவ்வாறான சட்டங்கள் சிலவற்றைக் கீழ் காணலாம்.
1) இறந்த கணவனின் சடலத்தோடு மனைவியையும் சேர்த்து எரிக்கும் சதி எனும் வழக்கத்தை இங்கிலாந்து காலனி அரசு 1829-ஆம் ஆண்டு தடைசெய்து, சட்டம் இயற்றியது. அச்சட்டம், 1987 சட்ட திருத்தத்திற்குப் பின் “The Commission of Sati (Prevention) Act’’ என அழைக்கப்படுகிறது.
2) கணவனை இழந்தவர் காலமெல்லாம் விதவையாகவே வாழ வேண்டும் என்ற வழக்கை ஒழித்து, இங்கிலாந்து காலனி ஆட்சி 1856-ஆம் ஆண்டு விதவைப் பெண்கள் மறுமணச் சட்டம் இயற்றியது.
3) சாதியைக் காப்பாற்ற குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டு வந்தது. 1829-ஆம் ஆண்டு இங்கிலாந்து, காலனி ஆட்சி குழந்தைத் திருமண தடைச்சட்டம் கொண்டு வந்தது. அது 2006-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு “Prohibition of Child Marriage Act’’ என அழைக்கப்படுகிறது.
4) 1956-ஆம் ஆண்டு பெண்களுக்கு ஆண்களைப் போல் தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு எனும் சட்டமியற்றப்பட்டது. இந்த மாற்றங்களுக்கு பெண்களே முக்கிய காரணம் ஆகும்.
இஸ்ரவேல், மக்களின் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று பெண்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் செய்யப்பட்ட சுவையான நிகழ்வு உள்ளது. அது எண்ணிக்கை நூல் 27:1-11 வரை உள்ள பகுதியில் அடங்கியுள்ளது. எல்லா சமூகங்களைப் போலவே இஸ்ரவேல் சமூகத்திலும் ஆணாதிக்க சிந்தனைகள் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அதே சமயம் எல்லா ஆதிக்கங்களுக்கும் எதிரான சிந்தனைகள் அச்சமூகத்தில் எழத்தான் செய்தது.
இஸ்ரவேல், மக்களின் சமூகத்தில் சொத்துரிமை, ஆண்களுக்குத்தான் என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக இறந்து போன ஒரு ஆணுக்கு ஆண்வாரிசு இல்லையென்றால் அவருடைய சொத்தை அவருடைய சகோதரருக்கு அளிக்க வேண்டும் என சட்டம் இருந்தது. இச்சூழலில் இந்த சட்டம் தவறு என்று செலாபுகாதின் என்பவரின் ஜந்து புதல்வியர் கலகக் குரல் எழுப்பினர். அவர்களின் பெயர் மக்லா, நோகா, ஒக்லா, மில்கா மற்றும் திர்சா என்பதாகும்.
இவர்கள் தங்கள் தந்தையின் மறைவுக்குப் பின் அன்றைய தலைவர்களாயிருந்த மோசே மற்றும் எலயாசரை சந்தித்து தங்கள் தந்தையின் சொத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர். இவர்களின் வழக்கை விசாரித்த மோசே, அதை ஆண்டவரிடம் எடுத்துச் சென்றார். அதற்கு ஆண்டவர், ‘‘நீ இஸ்ரவேல் மக்களிடம் கூறு. மகன் இல்லாமலொருவன் இறந்துவிட்டால் அவரின் உரிமைச் சொத்தை அவர் மகளுக்குச் சேரவேண்டும்’’ என்றார்.
இந்த சட்ட திருத்தம் பெண்களுக்குச் சொத்துரிமையை முழுமையாக வழங்கவில்லையென்றாலும். தாய் தந்தையின்றி ஆதரவற்று நிற்கும் பெண்களுக்கு இது சாதகமாக அமைந்தது. அது மட்டுமல்ல பல காலத்திற்குப் பின் பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள் உருவாக இச்சட்டம் ஒரு முன்னோடியாக இருந்தது எனலாம். இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எல்லாவித புரட்சிகர மாற்றங்களில் பெண்களின் பங்கு உள்ளதை நினைவிற் கொள்ள வேண்டும்.
பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).
The post மாற்றத்தை உருவாக்கும் பெண்கள் appeared first on Dinakaran.