×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

550. சக்ரகதாதராய நமஹ (Chakragadaadharaaya Namaha)

சீதையைத் தேடி இலங்கைக்குச் சென்ற அனுமான், அசோகவனத்தில் சீதையைக் கண்டார். ராமாயணம் பாடியும், ராமனின் அங்க அடையாளங்களைச் சொல்லியும், சீதா – ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை விவரித்தும், மேலும் ராமனின் கணையாழியைச் சீதையிடம் கொடுத்தும், தான் ராமதூதன் என்பதை உணர்த்தினார் அனுமான். சீதையிடம், உங்களைச் சந்தித்ததற்குச் சான்றாக ஏதேனும் அடையாளங்களைத் தாருங்கள் என்று பிரார்த்தித்தார் அனுமான்.

தனது சூடாமணியை அடையாளமாகத் தந்த சீதை, மேலும் சீதா ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை அனுமானிடம் அடையாளமாகச் சொன்னாள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் காகாசுரனின் கதை.சித்திரகூடத்தில் மந்தாகினி நதிக்கரையிலே சீதாராமர்கள் ஆச்சர்யமாக விளையாடினர். பின், சீதை மடியில் தலை வைத்து ராமபிரான் பள்ளிகொண்டார். அப்பொழுது இந்திரனின் மகன் காகாசுரன் சீதையின் திருமார்பில் கொத்தினான். சீதைக்கோ உறங்கிக் கொண்டிருக்கும் ராமனை எழுப்ப மனமில்லை.ஆனால், ராமனின் முகத்தில் சீதையின் திருமார்பிலிருந்து வழியும் ரத்தம் தெறித்தது. ரத்தம் பட்டு விழித்தெழுந்த ராமன், சீதையின் திருமார்பு புண்பட்டிருப்பதைக்கண்டார்.

இதற்கு யார் காரணம் என்று ராமன் தேடியபோது, ராமனிடம் அழகு காட்டிக் கொண்டு ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தான் காகாசுரன். ராமன், தான் சயனித் திருந்த தர்ப்பைப் பாயிலிருந்து ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்தரத்தை ஜபித்து, அதைக் காகாசுரன் மீது ஏவினான். காகாசுரனிடம் அஸ்திரம் நெருங்கி வரும் பொழுது, அஸ்திரத்தின் வெப்பம் தாங்க முடியாமல் காகாசுரன் ஓடத் தொடங்கினான்.

அவன் ஓடினால் அஸ்திரம் துரத்துகிறது, அவன் நின்றால் அஸ்திரமும் நிற்கிறது. முதலில் தன் தந்தையான இந்திரனின் உதவியை நாடினான் காகாசுரன். ஆனால், இந்திரன் அடைக்கலம் தரமுடியாது என்று மறுத்துவிட்டான். இதுபோல், ராம பாணத்தின் பெருமையை உணர்ந்து மூவுலகில் உள்ள தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், பறவைகள் உள்ளிட்ட எவருமே காகாசுரனுக்கு அடைக்கலம் தர முன்வரவில்லை. இறுதியில், ராமனிடமே வந்து சரணாகதி செய்தான் காகாசுரன்.

இவ்விடத்தில், வால்மீகி ராமாயணத்தில் உள்ளபடி மட்டும் நாம் எழுதினால், காகாசுரன் காலை நீட்டிக்கொண்டு விழுந்து, அதன் பின் சீதை அவன் தலை ராமன் திருவடியில் படும் படி கிடத்தினாள் என்ற செய்தி உள்ளதே, அதை நீங்கள் விட்டுவிட்டீர்களே என்று வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். எனவே பத்மபுராணத்தில் சொல்லப்பட்ட அந்த விஷயத்தையும் இணைத்து ரசித்துக்கொள்வோம். காகாசுரன் எப்படி சரணாகதி செய்வது என்று கூடத் தெரியாமல், இரண்டு கால்களையும் ராமன் முன் நீட்டிக் கொண்டு விழுந்தான். சீதாபிராட்டி கருணையோடு அவன் தலை ராமன் திருவடியில் படும் படி அவனைக் கிடத்தி, அவனைக் காப்பாற்றுமாறு ராமனிடம் பிரார்த்தித்தாள்.

காகாசுரனைக் காப்பது என்று ராமன் முடிவெடுத்தான். ஆனால், ஏவிய பிரம்மாஸ்திரத்துக்கு ஏதேனும் இலக்கு தர வேண்டும். அதனால், காகாசுரனின் கண்ணை அந்த பாணம் பறிக்குமாறு செய்தான் ராமன். பகவான் தன் கையால் ஒரு அஸ்திரத்தைத் தொட்டு ஏவினாலே அந்த அஸ்திரம் சுத்த சத்துவமயமாக மாறிவிடுகிறது. பகவான் என்ன மனதில் கொள்கிறாரோ, அதைத் தான் அது செய்யும். இதை நம் ஆச்சாரியர்கள், பகவான் எந்த ஆயுதத்தை உபயோகம் பண்ணினாலும், அதில் சக்கரத்தாழ்வாரின் அம்சம் இருக்கும் என்கிறார்கள். இந்த தர்ப்பைப் புல்லிலும் சக்கரத்தாழ்வார் ஆவேசம் செய்த படியால்தான் ராமனின் திருவுள்ளம் அறிந்து செயல்பட்டது அந்த தர்ப்பை.

காகாசுரன் ஓடினால் துரத்தியது, நின்றால் தானும் நின்றது. அவன் கண்ணைப் பறிக்கட்டும் என்று ராமன் தீர்மானித்த போது, கண்ணை மட்டும் பறித்தது. ஸ்ரீவைகுண்டத்தில் இத்தகைய பல ஆயுதங்களை பகவான் ஏந்தியுள்ளான். அத்தனை ஆயுதங்களும் நித்தியசூரிகள். அவர்கள் ஆயுதங்களாக இருந்து பகவானுக்குக் கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் சக்கரமாக ஸுதர்சனாழ்வார், சங்காக ஸ்ரீபாஞ்சஜன்யாழ்வார் ஆகியோர் இருக்கிறார்கள். இருவரையும் எப்போதும் தரித்திருப்பதால், திருமால் சங்குசக்ரகதாதர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 550-வது திருநாமம்.“சக்ரகதாதராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தன் திவ்யாயுதங்களால் திருமால் காத்தருள்வார்.

551. வேதஸே நமஹ (Vedhasey Namaha)

சாந்தோக்ய உபநிஷத்தில் 8-வது அத்தியாயத்தில் தஹர வித்யையின் அங்கமாகப் பிரஜாபதி வித்யை வருகிறது. அதில் பிரம்மா உபன்யாசம் செய்ய, அதைத் தேவர்களின் தலைவனான இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் அமர்ந்து கேட்கிறார்கள். ஜீவாத்மாவின் தன்மை மற்றும் ஜீவாத்மா முக்தி பெற்றுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் பிரம்மா விளக்குகிறார். ஒரு ஜீவாத்மா முக்தி அடைந்துவிட்டால், பாவங்களால் தீண்டப்படாமலும், மூப்பு, மரணம், பசி, தாகம், சோகம் என்பதெல்லாம் இல்லாமலும், பகவானுக்குக் கைங்கரியம் செய்வதற்கு ஏதுவான இருப்பிடத்தோடும், தருமத்துக்கு விரோதமில்லாமல் ஆசைப்படும் அனைத்தும் நிறைவேறும் தன்மையோடும் இருக்கும் என்று விளக்கினார் பிரம்மா.

இந்திரனும், விரோசனனும் அப்படிப்பட்ட ஜீவாத்மாவை அறிய விரும்புகிறோம் என்று பிரம்மாவிடம் கேட்டார்கள். பிரம்மா அதை அவ்வளவு எளிதில் உபதேசிக்க முடியாது. நீங்கள் இருவரும் 32 வருடம் பிரம்ம சரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இந்திரனும் விரோசனனும் 32 வருட விரதத்ததைப் பூர்த்திச்செய்தனர். பிரம்மா அவர்களுக்கு உபதேசம் செய்யத்
தொடங்கினார்.

உங்கள் கண்களால் கண்ணாடியில் எதைப் பார்க்கிறீர்களோ, அதுதான் ஜீவாத்மா. கண்களால் பார்க்கும் பிரதிபிம்பம்தான் ஜீவாத்மா என்றார். பிரம்மா இவ்வாறு சொல்லி இருவரையும் சோதனைதான் செய்தார். உண்மையில் அதுவல்ல ஜீவாத்மா. இதைக் கேட்ட இருவரும் தங்களின் பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தார்கள். விரோசனன், இதுதான் ஜீவாத்மா எனில், நாம் நம் சரீரத்துக்கு நன்கு அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தான். இந்த உபதேசத்தை ஏற்றுக் கொண்டு, விரோசனன் பிரம்மாவிடம் விடைபெற்றான். இந்திரனுக்கு இது அவ்வளவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், இன்னும் கொஞ்சம் விளக்குமாறு பிரம்மாவிடம் பிரார்த்தித்தான்.

பிரம்மா, அதற்கு இன்னும் 32 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்குமாறு சொன்னார். அதன்பின் இந்திரனிடம் பிரம்மா கனவில், நம்மைப் போலவே ஒரு வடிவம் வருகிறதே, அவன்தான் ஜீவாத்மா என்றார். இந்த முறையும் இந்திரனால் அது ஜீவாத்மா என ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கனவில் வரும் பிம்பமும் பல உணர்வுகளை அனுபவிக்குமே, அது எப்படி ஜீவாத்மாவாக இருக்க முடியும் என யோசித்தான்.

இந்திரனிடம், பிரம்மா இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள மீண்டும் 32 வருடம் பிரம்மசரிய விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இந்த முறை பிரம்மா, ஆழ்ந்த தூக்க நிலையில் இருப்பவன்தான் ஜீவாத்மா என்றார் இந்திரனிடம். கனவுகளையும் கடந்து தூங்குபவன்தான் ஜீவாத்மா என்றார். இந்திரன் யோசித்தான், தூங்குபவன் நினைவில்லாமல் இருப்பான். அவன் எப்படி ஆனந்தமே வடிவாக இன்பத்தை அனுபவிக்க முடியும் என யோசித்தான்.

ஜீவாத்மா பற்றி பூர்த்தியாக அறிய மேலும், 5 வருடம் பிரம்மசரிய விரதம் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரம்மா. இப்படி மொத்தம் 101 வருடம் முழுமையாக பிரம்மசரிய விரதத்தை முடித்த பின்னர், பிரம்மா இந்திரனுக்கு ஜீவாத்மா பற்றி முழுமையாக விளக்குகிறார்.`யார் ஒருவன் இந்த சரீரத்துக்குள் இருந்தால் கண்கள் பார்க்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் இருந்தால் காது கேட்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் மூக்கு நுகருமோ, அவன்தான் ஜீவாத்மா.

யார் ஒருவன் உள்ளே இருந்தால் மனம் சிந்திக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் நாக்கு சுவைக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. இதை எல்லாம் உள்ளே அடக்கி, “நான்’’ என்ற ஒரு உணர்வு இருக்கிறதே, அதுதான் ஜீவாத்மா. இன்று பிறவிப்பிணியில் கட்டுண்டு இருப்பதால், உனக்கு அதன் பெருமை தெரியவில்லை. ஜீவாத்மாவை உள்ளபடி புரிந்துகொண்டால், அதன்பின் முக்தி பெறலாம். பகவானை அடையலாம்’ என்றார் பிரம்மா.இந்திரனுக்கு ஓர் ஐயம் எழுந்தது.

பகவானை அடையவேண்டும் என்றால், அவரைப்பற்றி உபதேசம் செய்து இருக்கலாமே, எதற்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனக் கேட்டார். அதற்கு பிரம்மா, இந்த ஜீவாத்மாவைத் தன் சொத்தாக, அடிமையாகக் கொண்டவன்தான் பரமாத்மா. இந்த ஜீவாத்மாவுக்கே இவ்வளவு பெருமை என்றால், இதற்கு தலைவனாக இருக்கும் பகவானுக்கு எவ்வளவு பெருமை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது போல், எத்தனை எத்தனை ஜீவாத்மாக்களுக்குத் தலைவனாக இருக்கிறான் பகவான். ஒரு ஜீவாத்மாவை அறிந்து கொள்ள 101 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்கச் சொல்கிறார் பிரம்மா. எண்ணிலடங்கா ஜீவாத்மாக்களை தன் சொத்தாகக் கொண்டு, அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனின் பெருமையை நாம் உணர வேண்டும். ஜீவாத்மாவுக்கும் கல்யாணக் குணங்கள் இருக்கிறது.ஆனால், பகவான் கல்யாணக் குண கூட்டங்களின் கடலாக இருக்கிறான் என விளக்கினார். இந்திரன், முக்தி பெற்றால் என்ன கிடைக்கும் எனக் கேட்டான்.

பிரம்மா, அந்த உத்தம புருஷனை அடைவாய் என்றார். வைகுண்டத்துக்கு வரும் ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் தன் அத்தனை ஆனந்தங்களையும் பகிர்வார் பெருமாள். அதனால்தான் பகவான் `வேதாஹா’ எனக் அழைக்கப்படுகிறான். தன்னிடம் உள்ள மகிமைகளைத் தன் அடியார்க்கும் தருபவர் வேதாஹா. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 551-வது திருநாமம். பல வகைப்பட்ட, எல்லையில்லாத, மிகப்பெரிய, தனது பெருமைகளையெல்லாம் தன் அடியார்களுக்கு எப்பொழுதும் வழங்குபவர் என்று பொருள்.“வேதஸே நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஆத்மாவைவிட மேம்பட்ட பரமாத்மா விஷயமான ஞானம் ஏற்படும் படி திருமால் அருள்புரிவார்.

552. ஸ்வாங்காய நமஹ (Swaangaya Namaha)

திருக்கச்சி நம்பி என்ற மகான், பூவிருந்தவல்லி என்னும் க்ஷேத்திரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே பகவானிடம் மிகுந்த பற்று வைத்திருந்தார். நீண்ட நாட்களாகப் பெருமாளுக்கு விசிறி வீசிக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. 108 திவ்ய தேசத்துக்கும் தலைமையிடமாகக் கருதப்படும் திருவரங்கம் வந்து, அரங்கனைப் பணிந்தார் திருக்கச்சி நம்பி. தனக்கு ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கரியம் தந்தருளுமாறு பிரார்த்தித்தார் நம்பி. உபய காவிரிக்கு மத்தியில் குளிர்ச்சியாக நான் இருக்கிறேன். இந்தக் கைங்கரியத்தை மலைக்கு மேல் இருக்கும் திருமலையப் பனிடம் பிரார்த்தித்துப் பாருங்கள் என்றார் அரங்கன்.

திருக்கச்சி நம்பி திருமலைக்குச் சென்றார். அங்கே மலையப்பனிடம் கைங்கரியத்துக்குப் பிராத்தித்தார். மலையப்பனோ, இது `குளிர் அருவி வேங்கடம்’ என ஆழ்வார்களே பாடியுள்ளனர். மலைமேல் அருவிகளுக்கு மத்தியில் நான் குளிர்ச்சியாகத் தான் இருக்கிறேன். நீங்கள் இந்த கைங்கரியத்தைக் காஞ்சி வரதரிடம் பிரார்த்தியுங்கள். அவர்தான் யாகத்தில் தோன்றியவர் என்றார். திருக்கச்சி நம்பி அத்திகிரிவரதரிடம் அடிபணிந்தார். அத்திவரதர், ஆலவட்டக் கைங்கரியத்தை ஏற்கிறேன்.

ஆனால், ஒரு கேள்விக்கு பதில் அளித்தபின் கைங்கரியத்தை ஏற்கிறேன் என்றார். அரங்கனும், மலையப்பனும் ஆலவட்டக் கைங்கரியத்தை மறுத்த பின்னும், என்னிடம் கைங்கரியத்திற்குப் பிரார்த்தித்து இங்கு வந்துள்ளீர்களே, நான் உங்கள் கைங்கரியத்தை ஏற்பேன் என்ற எண்ணம் எதனால் உங்கள் மனதில் உண்டானது எனக் கேட்டார். வரதன் என்றால் வரத்தை அருளுபவன் என்று பொருள்.கேட்கும் அனைத்து வரங்களையும் அடியார்க்குத் தர வல்லவனான நீ, உனக்குத் தொண்டு செய்யும் பேற்றைக் கேட்டால் தராமல் இருக்க மாட்டாய். அதனால்தான் உன்னிடம்
வந்தேன் என்றார்.

ஒரு சாதாரண மன்னனுக்குக்கூட அவரின் பணியாள்கள் இரண்டு பக்கமும் சாமரம் வீசிப் பணிவிடை செய்து, அவர்தான் தங்களை ஆளும் மன்னர் என்ற பெருமையை உலகறியச் செய்கிறார்கள். அதுபோல், சர்வலோகச் சக்கரவர்த்தியான வரதருக்கு ஆலவட்டக் கைங்கரியம் போன்ற உபசாரங்களைச் செய்து உன் பெருமையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று அடியேனின் விருப்பம்.

இந்தக் கைங்கரியத்தால் பகவானான உனக்குப் புதிதாக பெருமை வரப்போவதில்லை. ஒரு குடை பிடித்து அடியார்கள் பகவானுக்கு உபசாரம் செய்வது போல், பகவான் தன் திருவடி நிழலை அடியார்களுக்கு தருகிறான். அதில்தான் நாம் அடைக்கலம் பெற்று உய்யமுடியும். கோவர்த்தன கிரிதாரியாக ஆயர்களைக் கண்ணன் ரட்சித்த வரலாற்றை நாம் அறிவோம். நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து மீட்டு அருளுபவனுக்கு ஒரு சிறு கைம்மாறு போல்தான் ஆலவட்டம் வீசுதல், சாமரம் வீசுதல் போன்றவை.

இந்தக் கைங்கரியங்கள் பகவானான உனக்கு மட்டுமே உரித்தானவை என்றார் திருக்கச்சி நம்பி. எனவே, அடியார்கள் பகவானுக்குச் சாமரம் வீசுதல் போன்றவை எல்லாம் பகவானின் இறையாண்மைக்கான அடையாளங்களாகும். இத்தகைய இறையாண்மைக்கான அடையாளங்களை கொண்டிருப்பதால், திருமால் `ஸ்வாங்க’ என்று அழைக்கப்படுகிறார்.

வைகுண்டத்தில் தனது இறையாண்மைக்கு உரிய அத்தனை அடையாளங்களுடனும் காட்சியளிப்பவர் திருமால். தனக்கே உரித்தான உலகை ஆளும் சர்வசக்தியை உடையவன் என்னும் அடையாளங்களுடன் காட்சி அளிப்பவர் ஸ்வாங்க. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 552-வது திருநாமம்.“ஸ்வாங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாமும் உலகில் நல்ல அடையாளங்களோடு நேர்மையாக வாழ திருமால் அருள்புரிவார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Saffron Spirituality ,Anuman ,Sri Lanka ,Sita ,Ashadhagam ,Anandan ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு