×

நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை பணி 90 சதவீதம் நிறைவு

*அடுத்த மாதம் சோதனை ஓட்டம்

நாகர்கோவில் : நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டின. அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும். இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் இயங்குகின்றன. சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிக்கு, கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள பாதையை இரு வழி பாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாக என இரண்டு கட்டங்களாக பணிகள் தொடங்கின.

இதில் மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ₹1,182.31 கோடி, நாகர்கோவில் – மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ₹1,003.94 கோடி ஆகும். இந்த திட்டத்தை ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை அகல ரயில் பணிகளில் மேலப்பாளையம் – திருநெல்வேலி இடையேயும், நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையேயும் தான் பணிகள் முடிவடைய வேண்டி இருந்தது.

இந்த பணிகளும் வேகமாக நடந்து வந்தன. இருப்பு பாதைகளை இணைத்தல், பிரிந்து செல்லும் தண்டவாளங்களை அமைத்தல், சிக்னல் கம்பங்கள் அமைத்தல், உயர் மட்ட மின் வயர்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. தற்போது இந்த பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே தண்டவாளங்கள் இணைப்பு பணி முற்றிலும் நிறைவடைந்தது. ஜல்லி நிரப்பும் பணிகள் மட்டும் நடக்கின்றன. ஜல்லி நிரம்பும் பணிகள் முடிவடைந்த இடங்களில் புதிதாக பதிக்கப்பட்ட தண்டவாளங்களின் தன்மையை பரிசோதனை செய்யும் பணிகள் நடக்கின்றன. குறிப்பாக பாலங்கள் மேல் தண்டவாளம் அமைந்த இடங்களில் கிரேன் பரிசோதனை நடக்கிறது. இந்த பணிகளும் மிக விரைவில் முடிவடைந்து விடும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மேலப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. சிறு, சிறு பணிகள் மட்டுமே உள்ளன. இந்த பணிகளும் விரைவில் முடிவடைந்து விடும் என தெரிகிறது.அக்டோபர் முதல் வாரத்துக்குள் இந்த வழித்தடங்களில் சோதனை ஓட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக மிக விரைவில், ரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

சென்னைக்கு கூடுதல் ரயில்?

நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்தால் தென் மாவட்ட மக்களின் நலன் கருதி, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே தென்னக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை முடிவடைந்ததும், இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உண்டு. குறிப்பாக நாகர்கோவில் – சென்னை வந்தே பாரத் ரயில், தாம்பரம் – ஐதராபாத் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு போன்ற புதிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை பணி 90 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Aralwaimozhi ,Melapalayam ,Tirunelveli ,
× RELATED தோவாளை அருகே நான்குவழிச்சாலையில்...