×

பணம் பட்டுவாடா செய்யாததை கண்டித்து சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல்

சங்கராபுரம், செப். 12: சங்கராபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளையும் தானியங்களை சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்காக அளித்து உடனடியாக பணத்தை பெற்று செல்வது வழக்கம். இந்நிலையில், சங்கராபுரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தானியங்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்துவிட்டு கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாகியும் சுமார் ரூ.18 லட்சம் வரை பணம் பட்டுவாடா செய்யவில்லை.

இதனால் தினந்தோறும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சரியான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஓரிரு நாளில் ரூ.18 லட்சத்தை பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பணம் பட்டுவாடா செய்யாததை கண்டித்து சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Sankarapuram ,Dinakaran ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்