×

முத்துப்பேட்டை அருகே பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

முத்துப்பேட்டை, செப். 12: முத்துப்பேட்டையை அடுத்த வங்கநகர் ஊராட்சி, ஓவர்குடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 102வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளியில் உள்ள பாரதியார் சிலைக்கு வட்டார கல்வி அலுவலர் ராமசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 83 பள்ளிகளில் பாரதியார் சிலை அமைந்துள்ள ஒரே பள்ளி ஓவர்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. கடந்த 1984ம் ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர்களால் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஒரு குக்கிராமத்தில் பாரதியின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலை மாணவர்கள் மத்தியில் பாரதியின் கவிதை வரிகளை நிலை நிறுத்தும். சந்திர மண்டலத்தில் கண்டுதெளிவோம் வானையளப்போம் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், இன்றைய தினம் சந்திரயான்-3 மூலம் நிலவை இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர் என்றார். தொடர்ந்து பாரதியின் சுதந்திர வேட்கை, நாட்டுப் பற்று குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டை அருகே பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bharatiyar Memorial Day ,Muthuppet ,Bharatiyar ,Overgudi ,Government Panchayat Union ,Primary ,School ,Banganagar Panchayat ,Muthupet ,
× RELATED கோவையில் காவலாளியை தாக்கிய ஆண் யானை!!