×

சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தில் இருக்கும் மாணவர்களின் சான்றிதழ், உடமை எடுக்க அனுமதி: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: சென்னை பரங்கிமலையில் உள்ள 41,952 சதுர அடி பரப்பளவு கொண்ட அரசு நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் கோயில் தேவஸ்தானத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், அந்த நிலம் ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாக கூறி வன்னியர் சங்க கட்டிடத்திற்கு பல்லாவரம் தாசில்தார் சீல் வைத்தார். இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களின் சான்றிதழ், லேப்டாப் ஆகியவை சிக்கியுள்ளதால், அவற்றை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செப்டம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு அந்த இடத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டும். அரசு மற்றும் கன்டோன்மென்ட் அதிகாரிகள் ஆஜராகி பூட்டை திறந்து சான்றிதழ்களை எடுக்க மாணவர்களை அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு, ஒப்புகை கையெழுத்திட்ட பிறகு கட்டிடத்தை மீண்டும் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தில் இருக்கும் மாணவர்களின் சான்றிதழ், உடமை எடுக்க அனுமதி: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vanniyar Sangh Building ,Chennai ,Kashi ,Parangimalai, Chennai ,High Court ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை