பெரம்பூர்: சென்னையில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்களை உடனுக்குடன் கைது செய்யவும் சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் வியாசர்பாடி, எம்கேபி நகர், புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று மீண்டும் வெளியே வந்த ரவுடிகளை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில் வியாசர்பாடி, எம்கேபி நகர் பகுதிகளில் கடந்த 20 நாட்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 22 ரவுடிகளை எம்கேபி நகர் போலீசார் உடனுக்குடன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், எஸ்ஐ சசிகுமார் தலைமையிலான போலீசார் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் அடிக்கடி குற்ற செயலில் ஈடுபட்டு சிறைக்குச் செல்லும் ரவுடிகள், வெளியே வந்ததும் வழிப்பறியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததும், அவர்கள் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு துரித நடவடிக்கை எடுத்த எம்கேபி நகர் போலீசாரை புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் பாராட்டியுள்ளார்.
மேலும் எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்தும்படியும், எந்தெந்த பகுதிகளில் சிசிடிவி கேமரா தேவைப்படுகிறதோ அந்த இடங்களை அடையாளம் கண்டு அந்த இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
The post 20 நாட்களில் 22 ரவுடிகள் கைது: எம்கேபி நகர் போலீசாருக்கு துணை கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.