×
Saravana Stores

சாயா நாடி 2

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

சூரியனையும் சந்திரனையும் ஒரு குறிப்பிட்ட நேரம் சக்தி இழக்கச் செய்யும் தன்மை ராகு – கேதுக்களுக்கு மட்டுமே உண்டு. ராகு ஒரு விதமான நிழலையும் கேது மற்றொரு விதமான நிழலையும் ராசிகளின் மீதும் கிரகங்களின் மீதும் பிரதிபலிக்கச் செய்யும் போது சில நேரங்களில் கிரகங்களால் இயக்கப்படும் பாவங்களும் இந்த சாயா கிரகங்களினால் இயக்கப்படாமல் செயலழிந்த தன்மையைப் பெறுகின்றன. இதனால், பெரிய மாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதால் சாயா கிரகங்களைப் பற்றி சிந்திப்பதில்லை பலர்.

ராகு என்னும் கிரகம் மனிதர்களின் கர்மாக்களை சேகரிக்கும். கேது அந்த கர்மாக்களுக்கு தகுந்தவாறு அந்த பாவத்தை இயக்கிக் கொண்ட செல்கின்றது. ராகு ஒரு விஷயத்தை இருக்கும் பாவத்திற்கு தகுந்தவாறு சேர்த்துக் கொண்டே செல்லும். கேது இருக்கும் பாவத்திற்கு தகுந்தவாறு விலக்கிக் கொண்டே செல்லும். அதாவது, ராகு சேர்க்கும் என்பதற்கு ஒரு பொருளை வாங்குவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கேது விலகும் என்பதற்கு ஒரு பொருள் உங்களை விட்டு விலகும் அல்லது மறையும் என்று பொருள். அதாவது, தொலைந்து போகும் என்பதாகும்.

கேது எந்த கிரகத்தை தொடுகிறதோ அந்த பொருள் மறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தினந்தோறும் ஒரு குறிபிட்ட நேரத்தில் ராகுவிற்கு உரிய காலமாக ராகு காலத்தையும் கேதுவிற்கு உரிய காலமாக எமகண்டத்தையும் இந்த சாயா கிரகங்கள் தன் வசம் வைத்திருக்கின்றன. ராகு நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்வதை கேது நம்மிடம் ெகாடுத்துச் செல்வார். கேது நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்வதை ராகு நம்மிடம் கொடுத்துச் செல்வார். அதே போல, ராகு – கேதுக்களுக்கு வெளியே உள்ள கிரகங்கள் ஒரு தன்மையான பலனையும் ராகு – கேதுக்களுக்கு உள்ளே உள்ள கிரகங்கள் வேறு வகையான தன்மையான பலன்களையும் தருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

கோட்சாரத்திரல், ராகு எந்த பாவத்திற்குள் நுழைகிறதோ அந்த பாவம் தொடர்பான காரியங்களை விஸ்தரிப்பு செய்யலாம். ஆனால், கண்டிப்பாக பேராசை கூடாது. அந்த பாவம் கண்டிப்பாக பேராசையை ஏற்படுத்தும். கோட்சாரத்தில், கேது எந்த பாவத்திற்குள் நுழைகிறதோ அந்த பாவம் தொடர்பான காரியங்களை விருத்தி செய்தல் கூடாது. அவற்றால் ஏமாற்றம் ஏற்படும். சாயா கிரகங்களின் அச்சுகள் சார்ந்த பலன்கள்: கோட்சாரத்தில் சாயா கிரகங்களுக்கு இடைப்பட்ட மத்திமமான புள்ளியில் உள்ள பாவகமோ அல்லது அவ்விடத்தில் கிரகமோ இருந்தால் சற்று பாதிப்பிற்கு உண்டாகும்.

சாயா கிரகங்களுக்கு அதாவது ராகு – கேது அச்சுகளுக்கு வெளியே உள்ள கிரகம் தொடர்பான உறவுகளையோ அல்லது காரகங்களையோ ஜாதகர் அதிகம் விலகியிருப்பார். ராகு – கேது அச்சுகளுக்கு வெளியே சனி இருந்தால் அந்த ஜாதகரின் வீட்டிலோ அல்லது அவர்களின் உறவினர்களின் வீட்டிலோ கண்டிப்பாக காதல் திருமணமோ அல்லது மாற்றுத் திருமணமோ கண்டிப்பாக இருக்கும் என்பது உறுதி.

சாயா கிரகங்களுக்கு பகல் பொழுதைவிட இரவுப் பொழுதிலும் அந்தி சாயும் பொழுதிலும் வலிமை அதிகமாக இருக்கும். சாயா கிரகங்களுக்கு வெளியே சந்திரன் அல்லது சனி இணைவில் இருந்தால் வீட்டின் அருகே இடிந்த நிலையிேலா அல்லது பழமையான பள்ளிக்கூடங்கள் இருக்கும். அந்த வீட்டில் ஆசிரியர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி.

ஜாதகர் ஆணாக இருந்து. ராகு – கேது அச்சுகளுக்கு ஒருபுறம் வியாழனும் மறுபுறம் சுக்ரனும் இருந்தால், ஜாதகருக்கும் மனைவி அல்லது குழந்தைகளை பிரிவினை அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். ஜாதகர் பெண்ணாக இருந்து. ராகு – கேது அச்சுகளுக்கு ஒருபுறம் செவ்வாயும் மறுபுறம் சுக்ரனும் இருந்தால், கணவனையோ அல்லது சகோதரனையோ பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு. சாயா கிரக அச்சுகளுக்கு வெளியே சந்திரன் இருந்தால் ஜாதகர் தாயின் அன்பை பெற முடியாதவர் ஆகிறார்.

அதாவது, வேலை மற்றும் வேறு காரணங்களால் தாயை பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலைகளுக்கு இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். சாயா கிரகங்களின் திசா காலங்களில் சேர்ந்து இருக்கின்ற அமைப்பு வரும் பின்பு பிரிவு வந்து சேரும். சில நேரம் கோட்சார கிரகங்களான சாயா கிரகம் சந்திரனை தொட்டும் செல்லும் காலத்தில் சேர்ந்து இருப்பர் மீண்டும் அதே பிரிவை தந்து விட்டுச் செல்லும்.

பொதுவாக, சாயா கிரக அச்சுகளுக்கு வெளியே செவ்வாய் இருப்பின் ஜாதகர் நிலம் தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு லாபமாக அமையாது. நிலம் அல்லது வீடு அவர்களுக்கு இருந்தாலும், அவற்றை நிர்வகிக்கவோ அல்லது பராமரிக்கவோ தவறி விடுவார். சாயா கிரகங்கள் கோட்சாரத்தில் அதே இடத்திற்கு வரும் பட்சத்தில் நிலத்தையோ அல்லது வீட்டையோ விற்கும் நிலை உண்டாகும். ஜோதிடத்தில் பொதுவாக செவ்வாயை வியாழன் பார்த்திருந்தால் யாராலும் சொந்திற்கு பங்கம் வாராது விற்பனை செய்யவும் முடியாது என ஜோதிடம் சொல்கிறது.

பிறப்பு ஜாதகத்தில் சாயா கிரகங்களின் மேல் சாயா கிரகங்கள் பயணிக்கும் காலத்தில் வாழ்வில் பெரிய மாற்றத்தினை உண்டாக்கும். அந்த மாற்றம் நாம் யூகிக்க முடியாத மாற்றமாக இருக்கும். சாயா கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் மற்றும் பாவங்களின் பலன்கள் அனைத்தும் எதிர் தன்மையை நோக்கி ஜாதகரை இழுத்துச் செல்லும். அதாவது, நன்மையாக இருந்தால் தீமையை நோக்கியும், தீமையாக இருந்தால் நன்மையை நோக்கியும் கொண்டு செல்லும்.

சாயா கிரகங்களுக்கு வெளியே லக்னம் அமையும் பட்சத்திலோ அல்லது சாயா கிரகங்கள் இரண்டு மற்றும் எட்டில் அமையும் கல்வியில் சிறிது தடையோ அல்லது தோல்வியோ கண்டிப்பாக ஏற்படும். அதைத் தொடர்ந்து அசுப கிரகங்கள் இருந்தால் கல்வியை அவர் தொடராமல் போய்விடும் என்பது உறுதி. சில நேரங்களில் அதே பள்ளியில் பாடத்தை மாற்றி கொடுக்கும் அமைப்பு இந்த சாயா கிரகங்களுக்கு உண்டு.

சாயா கிரக நாடி தொடரும்

The post சாயா நாடி 2 appeared first on Dinakaran.

Tags : Sivakanesan ,Sun ,Moon ,
× RELATED சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவப்படுகிறது