×

மேகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்

*மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு பொதுமக்கள், பக்தர்கள் வரவேற்பு

திருவாரூர் : நன்னிலத்தில் நேற்று நடைபெற்ற மேகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுக்கப்பட்டதுடன் பக்தர்களை வரவேற்று பேனர் வைக்கப்பட்டதும் பெரும் வரவேற்பை பெற்றது.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா அச்சுதமங்களம் கிராமத்தில் அருள்மிகு சவுந்தரநாயகி சமேத மேகநாதசாமி கோயில் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 3ம் குலோத்துங்கன் சோழன் ஆட்சி காலத்தில் சேக்கிழார் மூலம் கட்டப்பட்ட ஆலயம் என்றும் கூறப்படும் இக்கோயிலானது அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் திருமண தடைகள் நீங்குவதற்கு இக்கோயில் பரிகாரம் தலமாக இருந்து வருவதுடன் இங்குள்ள ஜுரஹரேஸ்வரர் சுவாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து புழுங்கல் அரிசி சாதம் மற்றும் மிளகு ரசம் வைத்து வழிப்பட்டால் தீராத உடல் காய்ச்சல் தீரும் என்பது ஐதீகமாகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலானது கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் 19 வருடங்கள் கடந்துவிட்டதால் மீண்டும் குடமுழுக்கு நடத்துவதற்கு திட்டமிட்டு உபயதாரர்கள் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று மகாகும்பாபிஷேகமானது நடைபெற்றது.

இதைமுன்னிட்டு, கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை வரையில் 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்று பின்னர் காலை 10 மணியளவில் விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சிவாச்சாரியார்கள் மூலம் புனிதநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகமானது நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் ராஜா, ஆய்வாளர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் மதநல்லிணத்திற்கு எடுத்து காட்டாக அப்பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று பேனர் வைத்திருந்ததுடன், கோயிலுக்கு சீர்வரிசையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் தேநீர், குடிநீர், நீர்மோர், குளிர்பானம் உள்ளிட்டவைகளையும் பக்தர்களுக்கு வழங்கிய நிலையில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இஸ்லாமியர்களின் இந்த பணி அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றது.

The post மேகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள் appeared first on Dinakaran.

Tags : Muslims ,Meghnathaswamy temple ,Thiruvarur ,Meghnathaswamy ,Nannilam ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...