×

ஏழைகளின் ஊட்டி ஏலகிரியில் மீண்டும் ‘பாராகிளைடிங்’பறந்து பறந்து இயற்கையை ரசிக்கலாம்


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திமுக ஆட்சிக்காலத்தில்தான் அப்போதைய முதல்வர் கலைஞர் இந்த ஏலகிரி மலைக்கு பல்வேறு மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுத்து சுற்றுலா தலமாக அறிவித்து படகு இல்லம் உள்ளிட்டவைகளை அமைத்து கொடுத்தார். இதனால் ஏலகிரி மலைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருந்து வந்தனர்.

குறிப்பாக சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கினர். அரசுக்கும் இதனால் வருவாய் கிடைத்தது. தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில், சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் அப்போதைய கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அதிகாரிகள் ஒன்றுகூடி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது ஏலகிரி மலையை நவீனப்படுத்த பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தினர். அதன்படி ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக வெளி நாட்டிலிருந்து வீரர்களை ஏலகிரி மலைக்கு வரவழைத்து, ‘பாராகிளைடிங்’ என்ற வானத்தில் பறந்தபடி இயற்கையை ரசிக்கும் வசதி செய்து தரப்பட்டது.

கடந்த 2008ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாகச விளையாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு ‘பாராகிளைடிங்’ தெரியாத சாதாரண மக்களும், வானத்தில் பறந்து பரவசமடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு பறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. ‘பாராகிளைடிங்’ தெரியாத சாதாரண மக்கள் பங்கேற்க விரும்பினால் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். தகுந்த விமானியுடன் இவர்கள் பறக்க முடியும். மலை மேட்டுப்பகுதியில் இருந்து பாராகிளைடிங் செய்து, சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் பறந்து இயற்கை அழகை, கழுகு பார்வையில் ரசிக்கலாம். பறக்க தொடங்கும் இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே 5 ஏக்கர் நிலத்தில் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் பாராகிளைடிங் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கிய திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதிமுக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தாமல் விட்டுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அறியாமல் ஏலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்தனர். எனவே பாராகிளைடிங் சாகச பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனால் மீண்டும் பாராகிளைடிங் தொடங்கப்படுமா? என்பது கனவாகவே இருந்தது.

தற்போது திமுக ஆட்சியில் அந்த கனவு நினைவாகும் விதமாக மீண்டும் பாராகிளைடிங் தொடங்க ஆயத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், ‘ஏலகிரி மலையில் அனைத்து வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சுற்றுலா நிதி திட்டத்தில் கோடை விழா அரங்கம் உள்ளிட்டவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்களை சேர்ந்த மக்களின் கனவாக இருக்கும் ஏலகிரி மலையில், விண்ணில் பறக்கும் பாராகிளைடிங் வசதி மீண்டும் தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் ஏலகிரி மலையில் பறக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெறும்’ என்றார்.

The post ஏழைகளின் ஊட்டி ஏலகிரியில் மீண்டும் ‘பாராகிளைடிங்’பறந்து பறந்து இயற்கையை ரசிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Elagiri ,Tirupattur district ,Jolarbate ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு!!