×

சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ரக்ஷன் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ரக்ஷன் உயிரிழந்துள்ளார்.
டெங்கு பாதிப்புக்கு எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுவன் ரக்ஷன் உயிரிழந்துள்ளார். மதுரவாயல் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டால் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக வானிலை காலமாற்றம் ஏற்படும் போது குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமாக காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு தொற்றும் நோய்கள் வருவது வழக்கம். அதனை தடுக்க மாநகராட்சி ஊழியர்களும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். இந்நிலையில் குறிப்பாக டெங்கு, மலேரியா, உள்ளிட்ட நோய்களை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் அதிக கவனம் மேற்கொள்ளுவார்கள்.

தற்போது பருவமழை தொடர்ந்து ஆங்காங்கே பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் ரக்சன். நான்கு வயது சிறுவனான ரக்சன் சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் பாதிப்பால் உடல்நல கோளாறு அடைந்துள்ளார்

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். இதில் காய்ச்சல் மேலும் தீவிரமடையவே, கடந்த திங்கள் அன்று சென்னை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். உடனடியாக சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் நேற்று இரவு திடீரென சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்சன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் உயிரிழப்புக்கு மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை முறையாக பராமரிக்காததும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததுதான் காரணம் என உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் போராட்டம் நடத்த போவதாக உறவினர்கள் அறிவித்த காரணத்தால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ரக்ஷன் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Boy Rakshan ,Maduravayal, Chennai ,Chennai ,Maduravayal ,Egmore ,Rakshan ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...