×

இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் புதிய வர்த்தக பாதை அமைப்பு: டெல்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு; ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் புதிய வர்த்தக பாதை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் டெல்லி ஜி 20 மாநாட்டு பிரகடனத்தை உலக தலைவர்கள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்ற ஜி 20 தலைமைப்பொறுப்பு கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் ஜி 20 கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதன் உச்சி மாநாடு நேற்று டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், கொரோனா தொற்று காரணமாக ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.திட்டமிட்டபடி நேற்று காலை டெல்லி பிரகதி மைதானத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பாரத மண்டபத்தில் ஜி 20 முதல்நாள் உச்சி மாநாடு தொடங்கியது. வந்திருந்த அனைத்து உலக தலைவர்களையும் பிரதமர் மோடி வரவேற்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த ஜி20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று பிரதமர் மோடி பிரகடனப்படுத்தி உள்ளார். அந்த வாசகம் பாரத மண்டபத்தில் திரும்பும் திசை எல்லாம் தெரிந்தது. தொடர்ந்து பாரத மண்டபத்தில் உலக தலைவர்களும், பிரதிநிதிகளும் கூடினர். மாநாட்டை பிரதமர் மோடி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தையும் ஜி20 அமைப்பில் இணைப்பது குறித்து பேசினார். ஒரே பூமி என்ற தலைப்பில், பாரத மண்டபத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் பிற்பகலில் ‘ஒரே குடும்பம்’ என்ற தலைப்பில் உரைகள் நடந்தன.

அப்போது டெல்லி ஜி20 உச்சிமாநாட்டின் பிரகடனத்தை உலக தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,’ எங்கள் அணிகளின் கடின உழைப்பு மற்றும் உங்கள் ஒத்துழைப்பால், டெல்லி ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் பிரகடனத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தி இப்போதுதான் கிடைத்துள்ளது. இந்த ஜி20 உச்சி மாநாட்டு பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது எனது முன்மொழிவு. இதை அனைத்து நாடுகளின் உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில், தங்கள் கடின உழைப்பால் இதைச் சாத்தியப்படுத்திய எங்கள் அமைச்சர்கள், அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

பின்னர் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் புதிய வர்த்தக பாதை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில்,’ நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று கூட்டாண்மையை அடைந்துள்ளோம். வரும் காலங்களில், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இது ஒரு பயனுள்ள வகையில் மாறும். இது முழு உலகத்தின் இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஒரு புதிய திசையை வழங்கும். வலுவான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை மனிதகுலத்திற்கான அடிப்படை அடிப்படை. இந்தியா எப்போதும் இதற்கு வலுவான முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிராந்திய எல்லைகளுக்குள் இணைப்பை இந்தியா கட்டுப்படுத்தாது. இணைப்பை நாங்கள் நம்புகிறோம்.

பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும். அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இதை அமெரிக்க அதிபர் பைடன் வழிமொழிந்தார். அவர் கூறுகையில்,’ இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கான ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த பாதை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வர்த்தகத்தை மிகவும் எளிதாக்கும். இந்த பாதையில் முதலீடு செய்ய விரும்பும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

பிரதமர் மோடி , சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கும் நன்றி’ என்று தெரிவித்தார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா இந்த உடன்படிக்கையைப் பாராட்டினார். அவர் கூறுகையில்,’இது இந்தியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையே மிக நேரடி இணைப்பாக இருக்கும். இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை 40 சதவீதம் வேகமாக செய்யும்’ என்று அவர் கூறினார். முதல்நாள் கருத்தரங்கம் முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உலக தலைவர்களுக்கு விருந்து அளித்தார். அதில் அனைத்து நாட்டு தலைவர்கள், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

* உலகளாவிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தனது தொடக்க உரையில்,‘‘ ஒட்டு மொத்த உலகும் ஒன்றிணைந்து இந்த உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை உலகளாவிய உறுதியான நம்பிக்கையாக மாற்ற வேண்டும். இந்தியாவின் ஜி20 தலைமை பதவியானது நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் அனைவருடனான உணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சேர்த்தல் என்பதன் அடையாளமாக மாறியுள்ளது. கொரோனாவிற்கு பின் உலகில் நம்பிக்கை இல்லாத ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோதல் இந்த நம்பிக்கை பற்றாக்குறையை ஆழமாக்கியுள்ளது. கொரோனாவை கடந்தது போல் பரஸ்பர நம்பிக்கையின் நெருக்கடியையும் நம்மால் சமாளிக்க முடியும். இது நாம் அனைவரும் ஒன்றாக நடக்க வேண்டிய நேரமாகும். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்காஸ் மற்றும் சப்கா பிரயாஸ் என்ற மந்திரம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாக மாறும்” என்றார்.

*புதிய வர்த்தக பாதையில் இணையும் நாடுகள்
இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைத்து இந்தியா அறிவித்துள்ள புதிய வர்த்தக பாதையில் இந்தியா, ஐக்கிய அரசு எமிரேட், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.

*ஜி20 அடுத்த தலைவர் பிரேசில்
ஜி20 அமைப்பு தலைவர் பதவி சுழற்சி முறையில் இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் வழங்கப்படும். கடந்த ஆண்டு இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவுக்கு வந்தது. இந்த உச்சி மாநாடு முடிந்ததும் அடுத்த தலைவர் பதவி இந்தியாவிடம் இருந்து பிரேசில் நாட்டிற்கு வழங்கப்படும். வரும் டிசம்பரில் பிரேசில் தலைமை பதவியை ஏற்கும்.

*அனைத்து நாட்டு தலைவர்களையும் வரவேற்ற பிரதமர் மோடி
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கோசி ஓஞ்சோ ஆகியோர் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கிற்கு முதலில் வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதை தொடர்ந்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோரை மோடி அன்புடன் வரவேற்றார். சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த ஜி20 தலைவராக பதவியேற்கவுள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், அர்ஜென்டினா அதிபர் ஆகியோரை மோடி கட்டித்தழுவி வரவேற்றார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, கொரிய அதிபர் யூன் சுக் யோல், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உருசுலா வான் டெர் லேயன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரும் பாரத் மண்டபத்துக்கு வந்தனர். சீனப் பிரதமர் லீ கியாங், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபு, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சயீத் ஹுசைன் கலீல் எல்-சிசி, ஓமன் துணைப் பிரதமர் சையத் ஆசாத். தாரிக் அல் சைட் மற்றும் ஸ்பெயின் துணை ஜனாதிபதி நதியா கால்வினோ ஆகியோரையும் மோடி வரவேற்றார்.

ஜி20ல் இணைந்த ஆப்ரிக்க யூனியன்

* 55 நாடுகள் கொண்ட ஆப்பிரிக்க யூனியன் ஜி20ல் இணைக்கப்பட்டது.

* ஜி 20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் துவக்கம் அறிவிக்கப்பட்டது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை 20 சதவீதமாக மாற்றுவதற்கான வேண்டுகோளுடன் ஜி 20 நாடுகளை இந்த முயற்சியில் சேர வலியுறுத்தியது.

* சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி 20 செயற்கைக்கோள் திட்டம் முன்மொழியப்பட்டது.

*இங்கிலாந்து, ஐப்பான், இத்தாலி பிரதமர்களுடன் மோடி பேச்சுவார்த்தை

ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கை தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு வர்த்தக தொடர்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து விவாதித்தார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் வர்த்தகம், பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 தீர்மானங்கள்

* ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

* ஜி20 அமைப்பானது அனைத்து வகையான தீவிரவாதத்தையும், தீவிரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடம் வழங்குபவர்கள், நிதி உதவி செய்பவர்களையும் கடுமையாக கண்டிக்கிறது. மேலும் தீவிரவாதத்தை ஒழிக்க, நிதி மற்றும் அரசியல் ரீதியாக சர்வதேச ஒத்துழைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தவும் அழைப்பு விடுக்கிறது. அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது

* உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்

* கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான உலகளாவிய கட்டமைப்பை அனைத்து நாடுகளும் உடனடியாக செயல்படுத்துவது.

* 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும்.

* செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச விதிகள் வகுக்கவும், பாதுகாப்பான, நம்பகமான, பொறுப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) ஏற்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும்.

* பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, உயர்தர கல்வி மற்றும் திறன் பயிற்சியை உறுதிப்படுத்த வேண்டும். கற்பவர்கள் அனைவரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான வசதிகளை பெற வேண்டும். உயர்தர தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான அணுகலை விரிவுபடுத்த வேண்டும்.

* பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். பாலின இடைவெளியைக் குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.

* பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நன்கு அளவீடு செய்யப்பட்ட பணவியல், நிதி, நிதி மற்றும் கட்டமைப்புக் கொள்கைகளின் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

* பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி, உலக வெப்பமயமாதல் குறைப்பு இலக்குகளை அடைவதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இதில் அனைத்து நாடுகளும் தனித்தனியாக தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

* ஊழலை ஜி20 அமைப்பு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஊழலை ஒழிக்க சட்ட ரீதியான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

இன்றைய நிகழ்ச்சிகள்

* ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று (செப்.10) காலை 8.15 மணி முதல் 9 மணி வரை மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வருகை தரவுள்ளனர். காலை 9 மணி முதல் 9.20 மணி வரை மகாத்மா காந்தியின் சமாதியில் மலர்வளையம் வைத்து தலைவர்கள் மரியாதை செய்கிறார்கள்.

* காலை 9.40 முதல் 10.15 வரை பாரத மண்டபத்திற்கு தலைவர்கள் வருகை தரவுள்ளனர். அவர்கள் காலை 10.15 முதல் 10.30 மணி வரை பாரத மண்டபத்தின் தெற்கு பிளாசாவில் மரக்கன்றுகளை நடும் விழாவில் பங்கேற்கின்றனர். காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை, உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வு நடைபெறும். அந்த அமர்வின் கருப்பொருள், ‘ஒரே எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெறும்.

*சீனாவின் பட்டுப்பாதையை முடக்கும் புதிய நடவடிக்கை
உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் வலுப்படுத்த சீன அதிபர் ஜின்பிங் ‘பொருளாதார பட்டுப்பாதை’ திட்டத்தை அறிவித்தார். இது, உலகம் முழுவதும் பல நாடுகள் வழியாக சாலை, துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் என உள்கட்டமைப்பை மேம்படுத்தி சீனாவுக்கான வர்த்தக பாதையை விரிவுபடுத்துவதாகும். 2013ல்ரூ.30 லட்சம் கோடியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இப்போது பாதைகள் மற்றும் சாலைகள் (பெல்ட் அண்டு ரோடு, சீன மொழியில் ஒரே பாதை, ஒரே சாலை) என பெயர் மாற்றத்துடன் பல மடங்கு மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் 150 நாடுகள் சீனாவுடன் இணைந்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ்தான் சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் சாலை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் வழியாக செல்கிறது. மேலும் இந்தியாவை சுற்றி பாகிஸ்தான், வங்கதேசம் என பல நாடுகளில் 7 துறைமுகங்களை சீனா அமைக்கிறது. இதற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், ஜி20 மாநாட்டில் சீனாவுக்கு போட்டியாக புதிய வர்த்தக பாதை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பாதை இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வர்த்தக பாதையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் வழியாக சாலை, ரயில் மற்றும் நீர்வழித்தட பாதைகள் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற நாடுகள் ரயில்வே, துறைமுகங்கள், மின்சார நெட்வொர்க்குகள் மற்றும் ஹைட்ரஜன் குழாய்களை இணைக்கும் யோசனைக்கு சம்மதித்துள்ளன. எனவே இது சீனாவின் ஒரே பாதை, ஒரே சாலை திட்டத்திற்கு சவால் கொடுப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் புதிய வர்த்தக பாதை அமைப்பு: டெல்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு; ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : New Trade Path Organization ,India ,Europe ,Middle East ,PM Modi ,G20 ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்