×

ராஜதந்திர பிரச்னைகளை கையாள்வது குறித்து பிரதமருக்கு ஆலோசனை கூறுவது சரியாக இருக்காது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரபரப்பு பேட்டி


புதுடெல்லி: சிக்கலான ராஜதந்திர பிரச்னைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து பிரதமருக்கு நான் ஆலோசனை கூறுவது பொருத்தமாக இருக்காது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஜி-20 மாநாடு, சீன எல்லை பிரச்னை, அமெரிக்காவுடன் நட்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு மத்தியில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போரின் பார்வையில், புதிய அணுகுமுறையை கடைபிடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியா தனது இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அமைதிக்கான சரியான பாதையில் செல்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை காட்டிலும், நான் நம்பிக்கையுடன் உள்ளேன். அந்த நம்பிக்கையானது, இணக்கமான சமூகமாக இந்தியா மாறுவதை பொறுத்தது. ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்நாளில் இப்படியொரு மாநாட்டை காண்கிறேன். நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது, இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

இந்திய வெளியுறவுக் கொள்கையானது, முன்பை விட மிகவும் பொருத்தமானதாகவும் முக்கியமானதாகவும் மாறியுள்ளது. ராஜதந்திரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை, கட்சி அல்லது தனிப்பட்ட அரசியலுக்காக பயன்படுத்துவதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு விழுமியங்கள், அமைதியான ஜனநாயகத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தியா தனது இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

மேலும் அமைதிக்காக வேண்டுகோள் முன்வைத்துள்ளது. இந்தியா-சீனா இடையிலான உறவுகள் மற்றும் சிக்கலான ராஜதந்திர பிரச்னைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து பிரதமருக்கு நான் ஆலோசனை கூறுவது பொருத்தமாக இருக்காது. ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், இருதரப்பு உறவுகளை சீராக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் எடுப்பார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

The post ராஜதந்திர பிரச்னைகளை கையாள்வது குறித்து பிரதமருக்கு ஆலோசனை கூறுவது சரியாக இருக்காது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,New Delhi ,Former ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...