×

தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி 11ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது

*சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஊட்டி : தொட்டபெட்டா செல்லும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்கின்றனர்.

அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, தொலைநோக்கி மூலம் கர்நாடக மாநிலம், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற சமவெளிப் பகுதிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், தொட்டபெட்டா செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இச்சாலை சீரமைக்கப்பட்டது.

ஆனால், இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் உள்ளதால் சாலையில் எந்நேரமும் நிழல் விழும் நிலையில், சாலை சில இடங்களில் பழுதடைந்துள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, இச்சாலையில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்துள்ளது. வரும் 11ம் ேததி திங்கள்கிழமை துவங்கி 13ம் தேதி வரை மூன்று நாட்கள் இச்சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்துள்ளது.

இதனால், இச்சமயங்களில் சுற்றுலா பயணிகள் சென்றால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும் என்பதால், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் மட்டும் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணிகள் முடிந்த பின் வழக்கம் போல், சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா செல்லலாம் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

The post தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி 11ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Totapetta ,Totabetta ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?