×

திருப்பதிக்கு நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்வதால் தூய்மை பணிக்கு 1,600 தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்

*தேவஸ்தானத்திற்கு துணை மேயர் வலியுறுத்தல்

திருமலை : திருப்பதி நகருக்கு நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்வதால் தூய்மை பணியில் ஈடுபடுத்த 1600 தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என துணை மேயர் வலியுறுத்தினார். திருப்பதி பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாநகராட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து துணை மேயர் அபினய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தண்ணீர் தேவைக்காக கல்யாணி அணை மற்றொன்று காளகஸ்தி அருகே ராமாபுரத்தில் கைலாசகிரி நீர்தேக்கம் பயன்படுத்தப்படுகிறது.

இதில் திருப்பதிக்கு கல்யாணி அணையில் இருந்து 25 எம்.எல்.டி. தண்ணீர், கைலாசகிரி அணையில் இருந்து 100 எம்.எல்.டி. தண்ணீர் கொண்டு வர வசதி உள்ளது. ஆனால் 65 எம்.எல்.டி. தண்ணீர் கொண்டு வருவதற்கான பைப் லைன் வசதி மட்டுமே உள்ளது. எனவே இரண்டாவது பைப் லைன் அமைக்க திட்டமிட்டுருந்த நிலையில் தேவஸ்தானம் சார்பில் 2வது பைப் லைன் அமைக்க ₹40 கோடி வழங்கி உதவி செய்ய முன் வந்துள்ளனர். இதற்காக மாநகராட்சி சார்பில் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பள்ளி, விடுதி, மருத்துவமனைக்கு தேவையான தண்ணீர் வெளியே வாங்குவதை காட்டிலும் பாதி விலைக்கு 10 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படும்.

மேலும் தேவஸ்தான மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்க சுவிம்ஸ் மருத்துவமனை பின்புறம் 3 ஏக்கரில்- சுத்திகரிப்பு ஆலை அமைக்க முடிவு செய்தனர். அதற்கும் மாநகராட்சி மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளதால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது பைப் லைன் அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு திருப்பதி மாநகராட்சிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

திருப்பதியில் நீர்நிலைகளாக இருந்த இடங்களில் 5341 வீடுகளாக மாறிய நிலையில் அவை மீண்டும் நீர்நிலைகளாக மாற முடியாத வகையில் உள்ளது. இருந்தாலும் இதனை பத்திரப்பதிவு செய்ய முடியாதபடி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதனை முதல்வர் ஜெகன் மோகனிடம் பேசி வீடுகளுக்கு 21 ஏ பிரிவின் கீழ் பட்டா வழங்கப்பட்டு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் பொம்மகுண்டா, சுந்தரய்யா நகர், சிங்காலகுண்டா உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் 7,800 வீடுகளும் உள்ளதால் அவற்றுக்கும் முழு உரிமை பெற்று தரப்படும். பல கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் இந்த வீடுகள் மீது உரிய அனுமதி வழங்காமல் இருந்த நிலையில் தங்கள் அரசு முன் வந்து வழங்கி உள்ளது.

திருப்பதி பெருநகரமாக விரிவடைந்துள்ள நிலையில் திருப்பதிக்கு உள்ளூர் மக்கள் அல்லாது லட்சக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், ரயில்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்து, திருப்பதி சாலைகளை குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர்.இதனால் நகரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். திருமலை போன்று சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து தூய்மை இந்தியாவில் முதல் நகரமாக மாற்ற திருப்பதி நகரை தூய்மையாக வைத்து கொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் 1,600 புதிய தூய்மை பணியாளர்களை நியமித்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.

இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாநகராட்சி சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். அதே நேரத்தில் திருப்பதி நகர வளர்ச்சிக்கு தேவஸ்தானமும் பங்களிப்பு வழங்க வேண்டும். தேவஸ்தானத்திற்கு தொடர்பான சொத்துகளுக்கு வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. திருச்சானூர் மட்டுமின்றி மகாபலிபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அந்தந்த மாநகராட்சி, ஊராட்சிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் திருப்பதியில் இதுவரை அவ்வாறு கட்டணம் பக்தர்களிடம் வசூலிக்கவில்லை.

மாநகராட்சிக்கு தேவஸ்தானம் ஒத்துழைப்பு அளித்தால் திருப்பதியை நாட்டிலேயே முதலிடத்திற்கு கொண்டு வருவோம். ஸ்மார்ட் சிட்டி நிதியில் கிரிக்கெட் ஸ்டேடியம் விரைவில் கட்டப்படும். திருப்பதியின் வளர்ச்சியை நோக்கி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கவுன்சிலர்கள் வெங்கடேஷ், நரசிம்மாச்சாரி, எஸ்.கே.பாபு, பொன்னால சந்திரா, கவுரவ உறுப்பினர்கள் தேவி, ஷேக் இமாம் சாஹேப் மற்றும் 49 கோட்டங்களின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கரக்கம்பாடி சாலை அமைக்க தேவஸ்தான முடிவுக்கு நன்றி

கரக்கம்பாடி ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே உள்ள சாலை கடந்த 1987ம் ஆண்டில் 80 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு கண்டு கொள்ளவில்லை. அந்த சாலையை தேவஸ்தானம் சார்பில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கரக்கம்பாடியில் இருந்து ரேணிகுண்டா சாலை வழியாக, திருச்சானூருக்கு எளிதாக செல்ல முடியும். அதற்கும் தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

The post திருப்பதிக்கு நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்வதால் தூய்மை பணிக்கு 1,600 தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Deputy Mayor ,Devasthanam Thirumala ,Tirupati Nagar ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி!