சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க இ-டெண்டர் முறை பின்பற்றப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடை அருகில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 2021, 2022ம் ஆண்டுகளில் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு தொடர்பாக பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட வேண்டும் என கடந்த 2022 ஜனவரி 31ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த டெண்டரை எதிர்த்த வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், 2022ம் ஆண்டு டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, புதிதாக டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் மது அருந்துவோர் பொது இடங்களையும், சாலைகளையும் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் பலதரப்பு மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மீண்டும் பார்கள் திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் பார் உரிமம் பெற வழக்கமான முறையில் டெண்டர் விடாமல், ஆன்லைன் வாயிலாக இ-டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
பார் உரிமம் பெறுவதற்காக இதற்கு முன்னர் டெண்டரில் பங்கேற்பவர்கள் ஏலத்தொகையை குறிப்பிட்டு பெட்டிகளில் போட்டுவிடுவர். அதில் இருந்து அதிக விலை கோரியவருக்கு உரிமம் வழங்கப்படும். ஆனால் பெட்டிகள் திறக்கப்படும் இடங்களில் டெண்டர் கோரியவர்கள் அனுமதிக்கப்படாததால் தற்போது இந்த முறை கைவிடப்பட்டு, வெளிப்படையான இ-டெண்டர் முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இ-டெண்டர் நடைமுறையில் அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. மேலும் அதிக தொகை கோரும் நபர் போதுமான ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்றால், அடுத்த அதிகபட்ச விலை கோரிய நபருக்கு டெண்டர் வழங்கப்படும், அதிக விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப்படாது. பார் உரிமையாளர்கள் தற்போது இ-டெண்டருக்கு தேவையான ஆவணங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் டெண்டருக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post முறைகேடுகளை தவிர்க்க டாஸ்மாக் பார் உரிமம் பெற இ-டெண்டர்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.
