×

நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து விற்பனை சர்வதேச போதைப்பொருள் கும்பலை சேர்ந்த நைஜீரியர் உள்பட 7 பேர் கைது: கோகைன், போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை, செப்.8: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெற்கு மண்டல மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு குழுவினர், கடந்த 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 7.45 கிராம் கோகைன், 7.20 கிராம் எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்து நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது, பெங்களூருவில் தங்கியுள்ள நைஜீரியர்கள் மூலம் போதை பொருட்கள் சென்னைக்கு வருவதாக தெரிவித்தார்.

உடனே அந்த நபர் மூலம் போதை பொருட்கள் வேண்டும் என்று நைஜீரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி 3 நைஜீரியர்கள் போதை பொருட்களுடன் பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் சென்னை கோயம்பேடு வந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக 3 நைஜீரியர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 47 கிராம் ஆம்பெட்டமைன், 138 கிராம் எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 நைஜீரியர்கள் அளித்த தகவலின் படி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் பெங்களூரு சென்று அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்த மேலும் 3 நைஜீரியர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 61 கிராம் ஆம்பெட்டமைன், 172 கிராம் எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 6 நைஜீரியர்கள் உள்பட 7 பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்திய போது, கைதான 3 பெண்கள் உள்பட 6 நைஜீரியர்கள் சர்வதேச போதை பொருள் விற்பனை கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இவர்கள் வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வந்து, சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வந்ததும் உறுதியானது. இதற்காக நைஜீரியர்கள் கடந்த ஓராண்டாக ரகசிய குறியீடு பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1.8 கிலோ ஆம்பெட்டமைன், 7.45 கிராம் கோகைன், 317 கிராம் எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து விற்பனை சர்வதேச போதைப்பொருள் கும்பலை சேர்ந்த நைஜீரியர் உள்பட 7 பேர் கைது: கோகைன், போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,South Zone Central ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்