×

இறை வழிபாட்டில் மந்திரம் – சமயம் – அறிவியல் 5

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வழிபாட்டின் வேர்களைத் தேடி…

மந்திரமாவது நீறு

வானவர் மேலது நீறு சுந்தரமாவது நேரு துதிக்கப்படுவது நீறு செந்துவர் வாயுமைபங்கன் திருவாலவாயான் திருநீறே என்று பாண்டியனுக்கு வந்த வயிற்றுச் சூலை நோயை தீர்த்த திருநீற்றை மந்திரமாக மதித்து மருந்தாகவும் கொண்டு போற்றுகின்றார் சிவத்தொண்டர்.

மந்திரம், தந்திரம், யந்திரம்

மந்திரம் என்பது சொல்லின் ஆற்றலை கொண்டு பயன் பெறுவதாகும். யந்திரம் என்பது கோடுகளாலும் (பல வகைக் கோணங்கள் நட்சத்திரங்கள் மற்றும் சூலாயுதம், தாமரை பகின்ற உருவங்கள்) சொற்களாலும் செப்புத்தகட்டிலும் தங்கத் தகட்டிலும் வெள்ளித் தகட்டிலும் தீட்டப்படும் படம் ஆகும். தந்திரம் என்பது எந்திரத்தில் இருக்கக்கூடிய சொற்களும் கோடுகளும் தம் மந்திரச் சக்தியினால் நடத்தித் தரும் செயல்களைக் குறிக்கும். இவைதான் நாம் அறிந்திருக்கும் மந்திர தந்திர யந்திரங்கள். எடுத்துக்காட்டாக, சத்ரு, சம்ஹார யந்திரம் என்பது சத்துருக்களை அழிப்பதற்காக வரையப்படும் எந்திரம் ஆகும். அதில் நசி, நசி போன்ற மந்திரங்கள் எழுதப்பட்டு அவை 108 முறை 1008 முறை என்று உச்சாடனம் செய்யும்போது சத்துருக்களை அழிக்கின்ற செயலை நிறைவேற்றும்.

இறைவனை வழிபட்டுப் பெறுகின்ற பலன்களில் இயந்திர தந்திரப் பலன்களும் உண்டு. எனினும் இவற்றை அனைவரும் செய்வது கிடையாது. மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்களும் திறமைசாலிகளும் மட்டுமே இம்மந்திர வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொள்கின்றனர். மந்திரம் கால் மதி முக்கால் என்றும் மந்திரதந்திரங்களில் நம்பிக்கை உள்ளது. ஓரளவுக்கு மந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது திறமையான சொல் ஜாலத்தாலும் செயகைகளாலும் மீதி வேலைகளைச் செய்து மக்களை நம்பவைப்பதும் உண்டு.

கிராமத்து மந்திரம்

கிராமத்துப் பூசாரிகள் தாயத்து மந்திரித்துத் தரும்போது அவற்றில் வாழ வேண்டும் என்று நினைப்பவருக்கு வசி வசி என்றும் தாழ வேண்டும் என்று நினைப்பவருக்கு நசி நசி என்றும் எழுதி செப்புத்தகட்டை உருட்டி உள்ளே வைத்து அடைத்து உள்ளே விபூதி இட்டு நிரப்பி சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கொடுப்பது வழக்கம். நசி நசி, வசி வசி என்பதுதான் அவர்களின் மந்திர உச்சாடனம் ஆகும். இதனைத் தனிநபர்களும் தங்களுடைய அன்றாட வழிபாடுகளின் போது மனதை ஒருநிலைப்படுத்தி செய்து வரப் பலன் கிடைக்கும். ஆனால், மனதை ஒருநிலைப்படுத்தி மந்திர உச்சாடனம் செய்வது என்பதற்கு நீண்ட நாள் பயிற்சி முக்கியம். மந்திரவாதிகள் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்று உள்ளனர். மற்றவர்கள் தேர்ச்சி பெற்ற பிறகு மந்திரதந்திர செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

ஆதியில் இருந்த மந்திர சமயச் சடங்குகள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வழிபாடு என்பது மந்திரம், சமயம் (மதம்) அறிவியல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாக விளங்கியது. இதற்கு உலகம் எங்கும் பல சடங்குகள் சான்றாதாரங்களாக விளங்குகின்றன. ஒரு வழிபாட்டுச் சடங்கு என்பதில் மந்திரம், மதம் அல்லது சமயம் மற்றும் அவை உணர்த்தும் ஒரு விஞ்ஞானக் கருத்தும் இடம் பெற்றன.

மந்திரம், மனிதனின் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் படைத்தது. மதம் அல்லது சமயம் என்பது அவனுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் அவன் திடீர் துக்கங்களை சந்திக்கும் போது அவற்றை எதிர்கொள்ளும் வகையில் காலம் காலமாக இருந்து வரும் சடங்குகளை அவன் திரும்பத் திரும்பச் செய்வதால் நன்மை கிடைக்கும் என்ற உறுதியாக்கப்பட்ட மனோநிலையை வலியுறுத்துவதாகும்.

இந்த வழிபாட்டுச் சடங்கை செய்தால் இன்ன நன்மை கிடைக்கும் அல்லது இன்னின்ன துயரங்கள் தீரும் என்பது காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வரும் கற்பிதங்கள் ஆகும். மூன்றாவதாக ஒரு வழிபாட்டுச் சடங்கில் காணப்படும் விஞ்ஞான கருத்து யாதெனில் வழிபாட்டுச் சடங்குகள் இயற்கை வளங்களைப் பயன்படுத்தவும் சுற்றுப்புற சூழ்நிலையைப் பாதுகாக்கவும் தொடர்ந்து அப்பகுதியில் வாழும் மக்கள் ஒரு சில சடங்குகளை செய்து வருகின்ற கருத்தைக் குறிக்கின்றது.

அவர்கள் செய்யும் சடங்குகள் மனதளவில் நம்பிக்கையையும் சுற்றுப்புற சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத ஆக்கப் பூர்வமான செயல்பாடு களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ‘கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை எரிப்பது அல்லது சுளுந்து சுற்றுவது போன்ற சமயச் சடங்குகள் மழைக்காலத்தில் பெருகிவரும் பூச்சி இனங்களை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த அறிவியல் உண்மை பெரும்பாலும் அச்சடங்குகளில் ஈடுபடுவோருக்கு தெரிவது கிடையாது.’ எனவே சில சமயச் சடங்குகள் அறிவியல் சார்ந்தும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் விஞ்ஞானத்துக்கு உகந்த செயல்பாடுகள் என்கிறோம்.

வழிபாட்டில் மந்திரமும் சமயமும்

மந்திரமும் சமயமும் ஒருங்கே இணையும் போது மந்திரச் சமயச் சடங்குகள் உருவாகின்றன. ஒருவனுக்குக் கடலைக் கடந்து பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கை வரும்போது அல்லது ஆசை ஏற்படும் போது அவன் கப்பல் கட்டும் பணியைத் தொடங்குகிறான். அதே வேளையில் அவன் அக்கடலில் செல்லும் போது சில ஆபத்துகளும் ஏற்படலாம் என்ற முன் அறிவு தோன்றும் வேளையில் கடலில் உள்ள தெய்வத்துக்கு அல்லது கடல் அம்மைக்கு சில வழிபாட்டுச் சடங்கு முறைகளை செய்து அவளை மகிழ்வித்து அவளுடைய ஆதரவோடு கடலில் பயணம் செய்வது நன்மை பயக்கும் என்று நம்புகிறான். எனவே அவன் ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன்பு இறைவனை வழிபடுவதும் வழிபாட்டில் சில சடங்குகளை மேற்கொள்வதுமாக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பையும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் ஒப்புதலைப் ஏற்று அவர்களுக்கும் பழக்கி வைத்தான்.

ஒரு வழிபாட்டுப் பழக்கம் மனிதனின் அச்சத்தைத் தீர்க்கும் வகையில் அவன் செய்கின்ற சில மந்திர சடங்குகளில் இருந்து தோன்றியதாகும். இதற்கு மந்திர சடங்கு என்று பெயர் சூட்டுவதற்கான காரணம் அந்தச் சடங்குக்கும் அவனுடைய செயலுக்கும் எவ்வித தொடர்பும் அறிவியல் பூர்வமாக இல்லை என்ற போதிலும் அவன் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்ற நம்பிக்கையோடு ஈடுபடுவதனால் அதில் ஒரு மந்திரச் செயல்பாடு அடங்கியிருப்பதாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

‘கடல் பயணத்திற்கும் கடல் விபத்துக்கும் காரணமாக இருப்பவற்றில் கடல் தெய்வம் என்பதற்கு இடமே கிடையாது. ஆனால் அவன் கடல் தெய்வம் என்பதை கற்பனையால் அச்சத்தால் உருவாக்கி அதற்கு வழிபாடுகள் செய்தால் அதன் மந்திர சக்தி பயணத்தின் போது தன்னைக் காப்பாற்றும், துன்பங்களில் இருந்து தன்னை விடுவிக்கும், என்று நம்பினான். இந்த நம்பிக்கை மதம் அல்லதுசமயத்தை வளர்த்துக் கொண்டு வந்து, வளர்த்துக் கொண்டேவருகிறது.’

சமய நம்பிக்கையை வளர்க்கும் மந்திரச் சடங்கு

சமய நம்பிக்கை வேரூன்றுவதற்குக் காரணமாக இருப்பது மந்திர சடங்குகளே ஆகும். மந்திரச் சடங்குகள் பற்றி விவரிக்கும் சர் ஜேம்ஸ் பிரேசர் மீ இயற்கைச் சக்திகளை (தெய்வ சக்தி, துஷ்ட சக்தி) செயல்படத் தூண்டும் முயற்சி என்று விளக்குகிறார். அதாவது, ஒரு மனிதன் சில மந்திரச் சடங்குகளை செய்யும்போது தன்னால் இயற்கையைக் கட்டுப்படுத்தவும் தன் விருப்பித்துக்குச் செயல்படுத்தவும் முடியும் என்று நம்புகிறான்.

அய்யனார் கோயில் இருக்கும் கரைகளில் முறையாக வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டால் கண்மாய் ஏரித் தண்ணீர் பொங்கி வெளியே வராது என்பது ஒரு சமய நம்பிக்கை. சப்த கன்னியர் இருக்கும் நாற்புறச் சாலைகளில் சாலை சந்திப்புகளில் கன்னிமாருக்கு வழிபாட்டுச் சடங்குகள் செய்தால் விபத்துகள் மற்ற பிற ஆபத்துகள் நிகழாது என்பது ஒரு சமய நம்பிக்கை.

உலகெங்கும் மந்திர சமயச் சடங்குகள்

இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தொகுத்து அக்காலகட்டத்தில் கடவுள் பெயரால் நடைபெற்ற சடங்குகளை ஆராய்ந்தபோது அவை இரண்டு விதிகளின் கீழ் அமைந்திருப்பதை சர் ஜேம்ஸ் ஃபிரேசர் கண்டறிந்தார். அவற்றை ஒருமை சட்ட விதி (law of similarity) என்றும் தொடர்புச் சட்ட விதி (law of contact) என்றும் பெயரிட்டார். இவ்விதிகளின் அடிப்படையில் சடங்குகளையும் பாகுபடுத்தினார்.

அவை போன்மைச் சடங்கு (homeopathic ritual / imitative ritual) என்றும் தொற்றுச் சடங்கு (contagious ritual) ஆகும். போன்மைச் சடங்கு என்பது போலச் செய்தல் சடங்காகும். அதாவது மழை வரவேண்டும் என்பது மனிதனின் வேண்டுதலாக / தேவையாக இருந்தால் அவன் மழை கொட்டுவது போலவும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போலவும் மழை பெய்தால் பயிர்கள் செழிப்பாக வளர்வது போலவும் சில சடங்குகளை முன்கூட்டியே செய்து பார்ப்பான்.

‘வடக்கே மழை கருக்கவே வாய்மடையெல்லாம்
சங்கு புரளவே தண்டொதுங்கி தடி ஒதுங்கி
வருகுதாம் காவேரி தாழை மடல் ஒதுங்கி வருகுதாம் காவேரி கெண்டை
மீன் வாய் திறந்து
வருகிறதாம் காவேரி சேரக் குலவையிடுங்க
கன்னிமார் எல்லோமே என்றும் வானம் இரண்டு
வரும் அல்லேலூ லேலோ மழையிருட்டும் கூட
வரும் தில்லேலூ லேலோ
மழை பொழிய வேணுமடி அல்லேலூ லேலோ
மக்கள் பஞ்சம் தீர வேண்டும் தில்லேலூ லேலோ
ஆத்துலையும் தண்ணி வர அல்லேலு லேலோ
அலை புரண்டு போக வேண்டும் தில்லேலூ லேலோ’

இவ்வாறு மழை வருவதாகக் கற்பனை செய்து பாடுவதால் அவனுக்கு மனதில் ஓர் உற்சாகமும் நம்பிக்கையும் உண்டாகிறது. இச்சடங்குகள் செய்வதால்தான் மழை வருகின்றது என்பது அல்ல. ஆனால், அவனுக்குள் ஏற்படும் ஆக்கப்பூர்வமான சிந்தனை (positive attitude) அவனை மகிழ்ச்சியோடு வைத்திருக்கின்றது. பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள தூண்டுதலாகவும் விளங்குகின்றது.

குடையோடு வந்தவன்

ஒரு நாட்டில், பல ஆண்டுகள் பஞ்சம் தலைவிரித்தாடியபோது ஒரு நாள் ஒரு முனிவர் அங்கு வந்து இப்பஞ்சத்தை போக்கி, நான் கனமழை வருவிப்பேன். எல்லோரும் வந்து என்னோடு ஒரு கூட்டுவழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள் என்றார். அந்த ஊர் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக கிளம்பி அந்த முனிவர் இருக்கும் இடத்துக்குச் சென்று அங்குக் கூடியிருந்தனர். அங்கு வந்தவர்களில் ஒரு சிறுவன் மட்டுமே குடை கொண்டு வந்திருந்தான். அவன் மட்டுமே ஆக்கப்பூர்வமான சிந்தனையும் நம்பிக்கையும் உடையவனாகருந்தான்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல,

அன்று மழை பெய்தது. அவன் அந்த முனிவரின் வழிபாட்டில் நம்பிக்கை உடையவனாக இருந்த காரணத்தினால் தான் குடை எடுத்து வந்திருந்தான்.

தொடர்பு மந்திரச் செயற்பாடு

தொற்றுச்சடங்கு என்பது ஒருவர் பயன்படுத்திய ஒருவரோடு இணைந்து உள்ள அல்லது பிறந்தது முதல் இணைந்திருக்கின்ற ஒரு பொருளை எடுத்து அவரை நினைத்து சில வழிபாடுகளை மேற்கொண்டால் அந்தப் பொருளை உடையவருக்கு நன்மையையோ தீமையோ ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். தொற்று மந்திர சடங்கு எனப்படுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஏராளமான தேவதைகள் நம்மைச் சுற்றி இருப்பதனால் ஒருவரின் பெயரை உரக்கக் கூறினால் அந்தப் பெயரை உடையவருக்கு தேவதைகள் நன்மையோ தீமையோ செய்ய வல்லன என்ற நம்பிக்கை தொடர்பு விதி சார்ந்த தொற்றுச் சடங்கைக் குறிக்கிறது.

இதன் காரணமாகவே கணவரின் பெயர் மன்னரின் பெயர் மாமனாரின் பெயர் போன்ற பெரியவர்களின் பெயர்களை பலர் அறிய பலர் கேட்க சொல்லக்கூடாது என்று அச்சம் அல்லது நடைமுறை இருந்து வந்தது. எட்டப்பன் என்பவர் புதுக்கோட்டை மன்னர் என்பதால் அவ்வூர் மக்கள் ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்லும்போது ஏழுக்கு அடுத்து ராசா என்றனர். எட்டு என்று சொல்வது கிடையாது. மரியாதை என்று இதனை தற்காலத்தில் புரிந்துகொண்டாலும் ஆதியில் தொடர்பு விதி சார்ந்த நம்பிக்கை ஆகும்.

கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தும் போது ஒருவர் வர இயலவில்லை என்றால் அவரிடம் பூஜைப் பொருட்களை தொட்டுத் தரச் சொல்லிக் கொண்டு வந்து பூஜையில் வைப்பதும் அவரிடம் கொடுத்து வாங்கி வந்து வஸ்திரம் புஷ்பம் போன்றவற்றைத் தெய்வ வழிபாட்டில் பயன்படுத்துவதும் தொற்று மந்திர சடங்குகளே ஆகும். (இவை குறித்து பின்னர் விரிவாகக் காணலாம்)

இன்றைய போன்மை மந்திரச் சமயச் சடங்கு

அழகர் மலையில் இருந்து இறங்கி வைகை ஆற்றுக்கு வந்து சேரும் கள்ளழகரின் வருகையும் அவர் மண்டூக (தவளை) ரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதும் இம்மழைச் சடங்கின் இன்றைய நிறுவனச் சமயச் சடங்காக. அல்லது வளர்ந்த சமயத்தில் விழா என்ற பெயரில் வழங்கப்படும் காணப்படும் மந்திரச் சமய வழிபாட்டுச் சடங்கு ஆகும்.

தமிழ் இலக்கியத்தில் முல்லைத்திணைக்குரிய கடவுள் மாயோன் எனப்படும் திருமால். அவனை மழையின் வருகையோடு வர்ணிப்பதைக் காணலாம். முல்லைப்பாட்டின் முதல் ஆறு அடிகள், கார்மேகத்தில் இருந்து கனமழை பெய்வதைக் கார் மேக வண்ணனான திருமாலுக்கு உவமையாக புனைந்துரைத்துள்ளது.

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

இவ்வருணனையில் கடலில் இருந்து நீர் ஆவியாகி சுழித்து மேலேறுவது திருமாலின் வலம்புரி சங்கினை ஏந்திய நீண்ட பெருங்கைகளை ஒத்துள்ளதாம். இத்தகைய உவமைகளைப் பின் வந்த இலக்கியங்களிலும் காண்கிறோம்.

ஆழி மழைக் கண்ணா
ஒன்றும் நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு
முகந்து கொடு
ஆர்த்து எறி

என்ற பாவை அடிகளும் மழை வேண்டி அன்று மனிதர் செய்த மந்திரச் சமயக் சடங்கின்தொடர்ச்சியே ஆகும்.

மந்திரத்துக்கும் சமயத்துக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள்

மந்திரத்துக்கும் சமயத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.

1. இரண்டுமே புனிதமானவை ஆக நம்பப்பட்டாலும் புரியாத புதிராக மர்மமானவையாக விளங்குகின்றன.

2. இரண்டும் இயற்கை சக்திகளுடன் (தெய்வம் அல்லது பேய் பிசாசு) தொடர்புடைய என்றாலும் இரண்டிலும் ஓர் உணர்ச்சிமயமான அழுத்தத்திலிருந்து விடுபட துடிக்கும் வேகமும் நோக்கமும் உள்ளன. இறைவனை வழிபட்டு ஏமாற்றத்தில் இருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை பெறலாம் அல்லது ஏதேனும் ஒரு அசுர சக்திகளுக்கு துஷ்ட சக்திக்கு மந்திரங்கள் செய்து சாவு, நோய், பொருள் இழப்பு போன்ற கஷ்ட நஷ்டத்தில் இருந்து விடுதலை பெறலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெறலாம் என்பது மந்திரம் சமயம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையாகும்.

3. மந்திரம் சமயம் ஆகிய இரண்டைச் சுற்றிலும் சமயத்தின் தோற்றத்திற்கு காரணமாக விளங்கக் கூடிய விலக்கு (Taboo) தூய்மை அல்லது அசுத்தம் (Fetish), குல மரபுச் சின்னம் (Totem) போன்றவை உண்டு.

4. மந்திரம் சமயம் ஆகிய இரண்டுமே சடங்குகள் சார்ந்தன. மதத்திலும் மந்திரத்திலும் நிறைய பொருட்களும் செயல்முறைகளும் நம்பிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றை ஒன்றுக்கு அடுத்து இன்னொன்று என்று வரிசையாகப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஒழுங்கும் காணப்படுகிறது. மேலும், இவற்றைப் பாரம்பரியமாக ஒருவர் மற்றவருக்கு பயிற்சி அளித்து வருவதால் இதில் திடீரென எந்த ஒரு புதுமையையும் புகுத்திவிட இயலாது. மந்திரமும் சடங்கும் பாரம்பரியம் சார்ந்தவை.

மந்திரத்துக்கும் சமயத்துக்கும் இடையிலான வேறுபாடுகள்

1. மந்திர நடவடிக்கைகள் ஓர் விளைவு அல்லது பலனை எதிர்பார்ப்பதாக இருக்கும். அதாவது இந்த மந்திரம் சொல்லி இன்ன சடங்குகளைச் செய்தால் இன்னின்ன பலன்கள் உண்டாகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருகிறது. ஆனால், சமயச் சடங்குகளில் இந்த நம்பிக்கை ஓரளவுக்கு இருந்தாலும் கூட பெரும்பாலும் அவை அவரவர் ஆத்ம திருப்திக்காகவே செய்யப்படுகின்றன. ஒரு மந்திரவாதி மந்திரச் சடங்கு ஒன்றை செய்துவிட்டு எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லை என்றால் அவன் கடும் கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளவான்.

ஆனால் ஒரு சமயச் சடங்கை அல்லது கோயிலில் ஒரு வழிபாட்டை, சிறப்புப் பூசையை ஒரு வேண்டுதலுக்காகச் செய்துவிட்டு அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்றால் இறைவன் மீது எந்த நடவடிக்கையும் கண்டனமும் எடுக்க இயலாது. யாரும் எடுப்பது கிடையாது. எனவே இது சுய திருப்திக்காகவே பெரும்பாலும் நடைபெறுகிறது.

2. மந்திரச் சடங்குகள் தெய்வ சக்தி அல்லது தீய சக்திகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையதாக நம்பப்படுகிறது. ஆனால், சமயம் அல்லது மதச் சடங்குகள் இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் சரணாகதி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவை இறைவனுக்கும் சடங்குகளைச் செய்கின்ற பக்தனுக்கும் இடையிலான உறவாகவே கருதப்படுகிறது.

3. மந்திரச் சடங்குகள் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்புக்காக செய்யப்படுகிறது. ஆனால், சமயம் என்பது கூட்டு கலாச்சாரத்தை வலியுறுத்த நடைபெறுகிறது. மதச் சடங்குகள் அம்மதம் சார்ந்த பலரும் ஒன்றிணைந்து அல்லது அம்மதம் சார்ந்த ஒவ்வொருவரும் அதில் நம்பிக்கை வைத்து செய்யப்படும் சடங்குகளைக் குறிக்கிறது. சமயச் சடங்கு பெரும்பாலும் வழிபாடு என்ற பெயரில் பூஜை, ஹோமம், ஜெபம், தொழுகை என்ற பெயரில் நடத்தப்படும். இதில் தனிநபர் விருப்பு வெறுப்பு என்பதற்கு இடம் கிடையாது. இது ஒரு கூட்டுச் செயல்பாடு. ஒவ்வொருவரும் தனித்தனியாக வழிபட்டாலும் அல்லது குடும்பத்துடன் வழிபாடுகளை மேற்கொண்டாலும் அந்த வழிபாட்டுச் சடங்கு கூட்டு கலாச்சாரத்தின் செயல்முறையே ஆகும்.

4. மந்திரச் சடங்குகளை நிறைவேற்றும் ஒருவரிடமிருந்து அடுத்தவர் கற்றுக் கொள்வது மரபு. பெரும்பாலும் மந்திர நிபுணர்கள் அல்லது மந்திரவாதிகள், சாமியாடி, மருளாடி, கோடாங்கி போன்றோர் தம்முடைய சீடருக்கோ அல்லது மகனுக்கோ தனக்குத் தெரிந்த மந்திர தந்திரங்களைக் பூசனை முறைகளைக் கற்றுத் தருவர். எந்திரங்கள் எழுதவும் பயிற்றுவிப்பர். அவர்களைத் தங்கள் கூடவே சில காலம் வைத்திருந்து மந்திரங்களின் நுட்பங்களை உணர்த்துவர்.

ஆனால் சமயச் சடங்குகளில் இவ்வாறு ஓரிருவர் கலந்து கொள்வதைவிட பலரும் கலந்து கொள்வது மரபு. பூஜை புனஸ்காரங்களை குருக்கள் / பட்டர் / பண்டாரம் செய்தாலும்கூட கூட்டமாக எல்லோரும் கலந்து கொள்வர். அப்போது தங்களுக்குத் தெரிந்த வழிபாட்டுப் பாடல்களை ஸ்தோத்திரங்களை சுலோகங்களை மனதுக்குள் சொல்லி அல்லது வாய்விட்டுச் சொல்லி இறைவனோடு தங்களுக்கு நேரிடையாக ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர்.

சூடம் ஏற்றுவது தீபம் ஏற்றுவது பூ கொண்டு போய் கொடுப்பது என்று பொருட்களை வழங்குவதுமாக பலரும் நேரடியாகப் பங்கு பெறுகின்றனர். மந்திரச் சடங்குகளில் இவ்வாறு மற்றவர்கள் பங்கு பெறுவதில்லை. பலன் வேண்டுவோர் பெரும்பாலான நேரங்களில் பார்வையாளராகவே அந்தச் சடங்குகளில் கலந்து கொள்வர். மந்திரச் சடங்குகளை செய்யும் ஓரிருவர் மட்டுமே அதில் பங்கு பெறுகின்றனர்.

தொகுப்பு: முனைவர் செ. ராஜேஸ்வரி

The post இறை வழிபாட்டில் மந்திரம் – சமயம் – அறிவியல் 5 appeared first on Dinakaran.

Tags :
× RELATED பாதுகையின் பெருமை