![]()
மதுரை: மதுரை அருகே, வீட்டிலிருந்து மாயமானவர் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது உடலை கிணற்றில் தேடியபோது, 2 மனித எலும்புக் கூடுகள் கிடைத்ததால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இரண்டு எலும்புக் கூடுகளையும் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் பூவலிங்கம். இவர், கடந்த பிப்ரவரியில் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், வேறொரு வழக்கு தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ‘அவர்கள் பூவலிங்கத்தை கொலை செய்து, சிலைமானை அடுத்துள்ள பி.எஸ்.குன்னத்தூரில் உள்ள கிணற்றில் வீசியதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் கிணற்றில் பூவலிங்கம் உடலை தேடும் பணியை மேற்கொண்டனர். அப்போது கிணற்றில் இருந்து இரண்டு மனித எலும்புக்கூடுகள் அவர்களிடம் சிக்கின. இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் இருக்கலாம் என தெரிகிறது.
அதில், ஆண் இறந்து 7 மாதங்கள் இருக்கலாம் என்பதால் அது பூவலிங்கத்தின் எலும்புக்கூடாக இருக்கலாம். ஆனால், கூடுதலாக கிடைத்த பெண் இறந்து 2 மாதங்கள்தான் இருக்கும் என சந்தேகிக்கிறோம். அது யாருடைய எலும்புக்கூடு என தெரியவில்லை. இதற்கிடையே இரு எலும்புக்கூடுகளையும் தடயவியல் பரிசோதனை அனுப்பியுள்ேளாம். அங்கிருந்து ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகே உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியம்’ என்றனர்.
The post மாயமானவர் உடலை தேடியபோது கிணற்றில் சிக்கிய 2 எலும்புக் கூடுகள்: தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் appeared first on Dinakaran.
