×

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் அவசரம் என்றால் தலைமை நீதிபதியை அணுகலாம்: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மிகவும் அவசரம் என்றால் உடனடியாக தலைமை நீதிபதியை அணுகி கோரிக்கை வைக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கடந்த 29ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, உமாபதி மற்றும் குமணன் ஆகியோர் நேற்று ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், ‘காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று (நேற்று) விசாரணை பட்டியலில் இருந்த சூழலில் அது நீக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு அரசின் அவசர மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பி.ஆர்.கவாய், காவிரி வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் மூன்றாவது நீதிபதியான பி.எஸ்.நரசிம்மா தற்போது விடுமுறையில் இருப்பதால், வழக்கை செப்டம்பர் 21ம் தேதி விசாரிக்கிறோம். இருப்பினும் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் ஏதேனும் பிரச்சனை, மற்றும் அவசரம் என்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் சென்று தமிழ்நாடு அரசு தரப்பில் முறையிட்டு நிவாரணம் கேட்கலாம் என உத்தரவிட்டார்.

இதில் 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு என்பது அடுத்த 6 நாட்களில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கர்நாடகா புதிய மனு
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,”தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை 3000 கன அடியாக குறைக்க வேண்டும்.

இதைத்தவிர காவிரி நதியின் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை அளவீடுகளை ஒட்டுமொத்த காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கணக்கிட வேண்டுமே தவிர கர்நாடகத்தின் நான்கு அணைகளில் உள்ள நீரின் அளவை மட்டும் வைத்து கணக்கிட கூடாது. உரிய கணக்கீடுகள் இல்லாமல் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் அவசரம் என்றால் தலைமை நீதிபதியை அணுகலாம்: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : CJ ,Supreme Court ,Tamil Nadu ,New Delhi ,Chief Justice ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு