![]()
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஜி20 உச்சி மாநாடு வரும் 9 ,10 தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9ம் தேதி இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளிக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘பாரத குடியரசு தலைவர்’ என அச்சிடப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியின் இன்றைய இந்தோனேசிய பயண அறிவிப்பிலும் ‘பாரதப் பிரதமர்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவை ‘பாரதம்’ என்றே அழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக கூப்பாடு போடுவதின் உண்மை நோக்கம் என்ன?பரதன் என்ற அரசர் சந்திர குல வம்சத்தைச் சேர்ந்தவன். முதல் சக்கரவர்த்தியாக இந்து தேசத்தை ஆண்டவன் அவன் தானாம். தன்னுடைய ராஜ்யத்தில் இந்து தேசத்தின் சகலப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டான் என்று, மகாபாரதத்தில் ஒரு பாடல் வருகிறது. எனவேதான் இந்த தேசம் ‘பாரத தேசம்’, பரத கண்டம் அவன் வழி வந்தவர்கள் பாரதியர்கள் என்று புராணங்களின் அடிப்படையிலேயே இவர்கள் வரலாற்றைத் திரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பாரத தேசம் என்றும், பாரதியம் என்றும் இவர்கள் சொல்வதும் இது இந்துக்களினுடைய நாடு என்பதைத்தான் வெளிப்படையாக பிரகடனப் படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவை ‘இந்தியா’ என்று அவர்கள் ஒப்புக் கொள்ளாத நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். குரு கோல்வாக்கர் விளக்கியிருக்கிறார். ‘இந்தியா’ என்றால் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் உள்ளடக்கும். ‘பாரதம்’ என்று சொன்னால் இந்துக்களை மட்டும் தான் குறிக்கும் என்று கூறுகிறார்.பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆர். எஸ். எஸ், இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதற்கு முனைந்திருக்கிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி ஆகும்.
The post பாரதம் என பெயர் மாற்ற முயற்சி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்கும்: வைகோ கடும் கண்டனம் appeared first on Dinakaran.
