சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியையும், வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத்தந்து, மாணவச் செல்வங்களை பட்டைத் தீட்டிய வைரமாக ஒளிரச் செய்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அடித்தளமிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு தங்களுடைய சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: என்றென்றும் எதிர்கால தலைமுறையை பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒப்பற்ற பெருமக்கள் ஆசிரியர்கள். கட்டை விரலை கேட்காமல் அறம் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் நம் திராவிட இயக்கத்திற்கும் இடையிலான பந்தம் நீண்ட நெடியது! அது என்றும் தொடரும். ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்.
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி: ஆசிரியராக பணிபுரிபவர்களின் பணி சிறக்கவும், மகிழ்ச்சியுடன், மன நிறையுடன், உடல் ஆரோக்கியத்துடன், எல்லா நலன்களும், எல்லா வளமும் பெற்று, புகழுடன், பெருமையுடன், நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ இந்த நல்ல நாளில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர் நியமனம், கட்டிடம், குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர் வசதி, மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுககு இணையான ஊதியம் தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு வழங்குதல், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தயாநிதி மாறன் எம்.பி.: இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். வாழ்வில் நம்மை ஏற்றிவைத்த ஆசிரியப் பெருமக்களை போற்றிப் புகழ்ந்து வணங்குவோம்!.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதில்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தும் உன்னதப் பணி. அப்படிப்பட்ட தெய்வீகப் பணியை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
கமல்ஹாசன்: கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு. தமிழ்ச் சமூகம் எழுந்து நின்றதிலும் எழுச்சி பெற்றதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம். நம் ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அவர்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகிறேன். மேலும் பல்வேறு தலைவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post ஆசிரியர் தினம் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.
