×

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் முதல் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை; விக்ரம் லேண்டர் 40 செ.மீ.க்கு மேல் எழும்பி பறந்து வெற்றிகரமாக தரையிறங்கியது

சென்னை: நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் ஒரு கட்டமாக, நிலவின் தென் துருவத்தில் அனைத்து ஆய்வுகளையும் வெற்றிகரமாக முடித்த லேண்டரை 40 செ.மீ உயரத்திற்கு மேலெழுப்பி இஸ்ரோ சோதனை செய்துள்ளது. விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பலரும் பாராட்டியுள்ளனர். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவரும் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்தது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் உள்ள ஆய்வுக்கருவிகள் பல்வேறு ஆய்வுகளை செய்தன.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாற்றம் மற்றும் அதிர்வுகள் பற்றி ஆய்வு செய்து முக்கிய தகவல்களை அனுப்பியது. அதேபோல், பிரக்யான் ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது. மேலும் அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டானியம், மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவற்றின் ஆயுள்காலம் வெறும் 14 நாட்கள் மட்டுமே. லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றில் இருக்கும் சோலார் பேனல்கள் சூரியஒளியை பயன்படுத்தி ஆய்வுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைத்துக்கொள்ளும். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் 14 நாட்கள் மட்டுமே சூரியஒளி கிடைக்கும்.

அதன்பிறகு அடுத்த 14 நாட்கள் சூரியஒளி கிடைக்காது. அதன்படி சூரிய ஒளி கிடைக்காத பட்சத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவில் ஓய்வு நிலையில் இருக்கும். அதாவது நிலவில் செயலிழக்க செய்யப்பட்டு நிலவிலேயே வைக்கப்படும். அதனை தொடர்ந்து ஓய்வு நிலையில் உள்ள லேண்டர் மீண்டும் பணிகளை தொடங்க ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகருமா என்ற சோதனைகளை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். இதுகுறித்து, இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில், விக்ரம் லேண்டர் தனது குறிக்கோள்களை நிறைவேற்றிவிட்டது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தணிக்கை கொடுத்தவுடன் லேண்டரில் உள்ள இன்ஜின் செயல்பட தொடங்கி 40 சென்டி மீட்டர் உயரம் வரை பறந்து எதிர்பார்த்ததை போல 30 முதல் 40 சென்டி மீட்டர் தூரம் சென்று பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நடைமுறை எதிர்காலத்தில் மாதிரிகளை எடுத்து திரும்பவும் மனிதர்கள் நிலவுக்கு சென்று திரும்பும் திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கும். லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளும் சீராக செயல்பட்டது. விண்கலம் சரியாக இயங்கியது. கருவிகளில் செயல்முறைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின் லேண்டருக்குள் லேண்டரின் ராம்ப், காஷ்டு மற்றும் இல்சா மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும், நேற்று காலை 8 மணி அளவில் விக்ரம் லேண்டர் ஸ்லீப் மோடுக்கு சென்றது. அதற்கு முன்னதாக லேண்டரில் உள்ள மூன்று கருவிகளும் புதிய இடத்திலும் பரிசோதனைகளை மேற்கொண்டது. அதிலிருந்து கிடைத்த தகவல்கள் பூமிக்கு அனுப்பப்பட்டது. தற்போது கருவிகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டன. லேண்டரின் ரிசீவர்கள் தொடர்ந்து செயல்படுகிறது. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவர் போல சோலார் சக்தி தீர்ந்து மற்றும் பேட்டரிகள் முழுமையாக காலியானதும் ஓய்வு நிலைக்கு சென்றுவிடும். வரும் 22ம் தேதி மீண்டும் விழித்துக் கொள்ளும் என நம்புகிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரக்யான் ரோவர் தனது 14 நாள் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதனை தொடர்ந்து பிரக்யான் ரோவர் பணிகளை முடிக்கப்பட்ட பின் ஓய்வு நிலையில் உள்ள லேண்டரின் நிலையை விஞ்ஞானிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. நிலவுக்கு மனிதனை அனுப்பி சோதித்துப் பார்க்கும் ஒரு திட்டமாகத்தான் லேண்டரை மேலே 40 சென்டி மீட்டர் மேல் எழுப்பி வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

The post நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் முதல் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை; விக்ரம் லேண்டர் 40 செ.மீ.க்கு மேல் எழும்பி பறந்து வெற்றிகரமாக தரையிறங்கியது appeared first on Dinakaran.

Tags : ISRO ,Vikram Lander ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...