×

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றமே நடத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14ம்தேதி கைது செய்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது தரப்பில் வழக்கறிஞர் பரணிகுமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது. சிறப்பு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் மனுவை விசாரிக்க சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்று தெரிவித்தார். இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற இழுபறியும் நிலவியது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர். இது குறித்து தலைமை நீதிபதியிடம் விளக்கம் கேட்டு வாருங்கள் என்று நீதிபதிகள் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜராகி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். சிறையில் செந்தில் பாலாஜி 3 முறை நிற்க முடியாமல் கீழே விழுந்து விட்டார். மற்றவர் துணை இல்லாமல் அவரால் நீண்ட நேரம் அமர்ந்தோ எழுந்து நிற்கவோ முடியாது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி ஸ்டான்லி மற்றும் புழல் சிறை மருத்துவர்களின் அறிக்கைகளை தாக்கல் செய்தார். எந்த நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்றுதான் இந்த நீதிமன்றம் முடிவெடுக்கும். ஜாமீன் மனு மீது இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றார்.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, இந்த நீதிமன்றம் தான் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டுமென்ற எந்த விருப்பமும் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட பிரிவு 4ன் கீழ் தண்டனை தரக்கூடிய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட பிரிவு 43 (1)ல் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் அரசாணை படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒன்றிய அரசின் அறிவிப்பாணை படி சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு எம்.பி, எம்.எல்.ஏக்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து பிறப்பித்த அரசாணையால் மத்திய சட்டத்தை மீற முடியாது. எனவே, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மட்டுமின்றி முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் வழக்கின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த ஆவணங்களை முதன்மை அமர்வு நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும். ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றமே நடத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilbalaji ,Primary Session Court ,Chennai High Court ,Chennai ,Senthil Balaji ,Enforcement Department ,Senthilephaly ,Court of Main Session ,
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு