×

அன்னிய செலாவணி மோசடியில் டிடிவி.தினகரனை திவாலானவராக அறிவிக்க கோரிய நோட்டீசை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி.தினகரனை திவாலானவர் என்று ஏன் அறிவிக்க கூடாது என்று அமலாக்கத்துதுறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தினகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டுள்ளது. அன்னிய செலாவணி மோசடி செய்ததாக டிடிவி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அவர் கட்டவில்லை. இதையடுத்து, அவரை திவாலானவராக ஏன் அறிவிக்க கூடாது என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், கலைமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேசன் ஆஜராகி, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி.தினகரனுக்கு முதலில் 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்ததால் அந்த அப்பீலை மத்திய அமலாக்கத்துறை விசாரித்து 31 கோடி ரூபாயை 28 கோடி ரூபாயாக குறைத்தது.இந்த அபராத தொகையை தினகரன் செலுத்தாமல் இழுத்தடித்து வழக்குக்கு மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். அபராதம் விதித்ததை அமலாக்கத்துறை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

அவர் அபராத தொகையை செலுத்தாமல் இருந்ததால் ஏன் திவாலானவர் என்று அறிவிக்க கூடாது என்று அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியது. உச்ச நீதிமன்றம் வரை அவர் மேல்முறையீடு செய்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருந்தும் அவர் ஒரு பைசா கூட செலுத்தவில்லை. எனவே, அவருக்கு கொடுத்த நோட்டீசு சரியானது தான். அதை ரத்து செய்யக்கூடாது. அதை தனி நீதிபதி ரத்து செய்தது செல்லாது என்று வாதிட்டார். இந்த விசாரணை இன்றும் தொடர்கிறது.

The post அன்னிய செலாவணி மோசடியில் டிடிவி.தினகரனை திவாலானவராக அறிவிக்க கோரிய நோட்டீசை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinakaran ,iCourt. Archives ,TTV ,iCourt ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...