×

ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த நீட் பயிற்சி மையங்கள் தனிப்பட்ட கருத்தை ஆளுநர் திணிக்கக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

ஈரோடு: நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் தனிப்பட்ட கருத்தை திணிக்கக்கூடாது என அன்புமணி தெரிவித்தார். ஈரோட்டில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தில் எதார்த்தமான பல நடைமுறை பிரச்னைகள் உள்ளன. ஒரே நாளில் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? உள்ளாட்சி மன்றத்தில் 4 வாக்குகள் செலுத்த வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் சேர்த்தால் 6 வாக்குகள் செலுத்த வேண்டும். இதனை போட முடியுமா? என பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் 12.5 லட்சம் மட்டுமே உள்ளது. இதை வைத்து ஒரு தேர்தல் மட்டுமே நடத்த முடியும்.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை இணைத்து நடத்தினால் 25 லட்சம் இயந்திரங்கள் தேவை. கூடுதல் இயந்திரங்கள் வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும். உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்து நடத்தினால் இன்னும் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு என்ன பரிந்துரை செய்கிறது என்பதை பார்த்து பாமக நிலைப்பாடு, கருத்துக்களை வெளிப்படுத்துவோம். தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் சந்திக்க பாமக தயாராக உள்ளது.

நீட் தேர்வு தேவையில்லாதது. நான் ஒன்றிய அமைச்சராக இருந்தபோதுகூட நீட் தேர்வை கொண்டு வர வலியுறுத்தினர். அதை நான் ஏற்கவில்லை. நீட் பயிற்சிக்காக ஆண்டிற்கு 1 லட்சம் கோடி ரூபாய் பணம் பயிற்சி மையத்தினர் சம்பாதித்து வருகின்றனர். இதுவே மருத்துவக்கல்வியை வணிக மயமாக்குவதற்கு சிறந்த உதாரணம். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் அவருடைய தனிப்பட்ட கருத்தை திணிக்கக்கூடாது. ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆளுநர் நீதிபதி போல செயல்பட வேண்டும். ஜனாதிபதி அவரது தனிப்பட்ட கருத்தை சொல்கிறாரா? மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றினால், ஆளுநர் அதில் கையெழுத்து போட வேண்டும். அதுதான் ஆளுநரின் கடமை. இவ்வாறு அன்புமணி கூறினார்.

The post ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த நீட் பயிற்சி மையங்கள் தனிப்பட்ட கருத்தை ஆளுநர் திணிக்கக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Need Training Centers ,Andaramani ,Erode ,Anmani ,Governor of Tamil Nadu ,Anniparani ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...