×

மழை மிரட்டலுக்கு இடையே இன்று மோதல்; பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக ஆடும் வாய்ப்பை நினைத்து பார்க்கவில்லை: நேபாள கேப்டன் பேட்டி

பல்லெகலே : 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்துவருகிறது. இதில் பல்லெகலேவில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும் 5வது லீக் போட்டியில் இந்தியா-நேபாளம் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானுடன் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இன்று கத்துக்குட்டி நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைய இந்தியா தயாராக உள்ளது. மறுபுறம் நேபாளம் முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த நிலையில் இன்று இந்தியாவுக்கு எதிராக தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான். இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக ஷமி மற்றும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.

இதனிடையே மழை மிரட்டல் வேறு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பல்லெகலேவில் இன்று 80 சதவீதம் இடி மின்னலுடன் மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி நடப்பது சந்தேகம் தான். இந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டதால் இந்தியா 2வது அணியாக குரூப் ஏ பிரிவில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். இதனிடையே இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து நேபாள கேப்டன் ரோகித் பவுடல் கூறுகையில், நாங்கள் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வருகிறோம். அவர்கள் சூப்பர் ஸ்டார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஆனால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எங்களிடம் சில திட்டங்கள் இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக இரண்டு தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. கிரிக்கெட் உலகம் எங்களை கவனிக்கும் வகையில் இதுபோன்ற வாய்ப்புகளை கணக்கிட விரும்புகிறோம், என்றார்.

சூப்பர் 4 சுற்று போட்டிகள் இடமாற்றமா?
ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் 5, பைனல் என மொத்தம் 6 போட்டிகள் கொழும்பில் நடைபெற உள்ளது. இதனிடையே அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வரும் 10ம்தேதி வரை கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டிகளை கொழும்பில் இருந்து பல்லெகலே, தம்புலா, ஹம்பன்தோட்டா ஆகிய இடங்களுக்கு மாற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. இருப்பினும் ஒளிபரப்பு சாதனங்களை கொண்டு செல்வது, வீரர்கள் தங்குவதற்கான ஓட்டல் போன்ற சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை திரும்பிய பும்ரா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. 29 வயதான இவருக்கு கிரிக்கெட் வர்ணணையாளரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சஞ்சனா கணேசனுக்கும் கடந்த 2021ம்ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது சஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் முதல் குழந்தையின் பிரவசத்தின் போது மனைவியுடன் இருக்க விரும்பிய பும்ரா மும்பை திரும்பி உளளார். சூப்பர் 4 சுற்றுக்கு முன் அவர் அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மழை மிரட்டலுக்கு இடையே இன்று மோதல்; பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக ஆடும் வாய்ப்பை நினைத்து பார்க்கவில்லை: நேபாள கேப்டன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,Pallekale ,16th Asian Cup Cricket Series ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...