×

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

 

ராமநாதபுரம், செப். 4: ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை அமைச்சர் ராஜ கண்ணப்பன் துவக்கி வைத்தார். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார்.

அப்போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் வழியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு துறையில் தேசிய அளவில், சர்வதேச அளவில் சாதிக்க பல்வேறு திட்டங்கள், உதவிகள் செய்து வருகிறார்.

இதனால் நம் மாணவர்கள், இளைஞர்கள் சாதித்து வருவதால் விளையாட்டு துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகவும், முன் உதாரண மாநிலமாகவும் திகழ்கிறது. அரசு வழங்கக் கூடிய திட்டங்கள், சலுகைகளை ,நகர்புறம்,கிராம புற மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி முன்னேற வேண்டும். விளையாட்டில் சிறந்து விளங்கினால் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித்தனியாக சுழற்கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, சன் சம்பத்குமார், தௌபிக் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Rajaganappan ,Ramanathapuram ,Thisuga Youth ,Ramanathapuram District ,Artist Century ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...