×

உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை: யுஜிசி முன்னாள் தலைவர் கருத்து

சென்னை: ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ்தோரட் தெரிவித்தார். ஒன்றிய பல்கலைக் கழகங்கள், ஐஐடிகளில் சமூகப் பாகுபாடு மற்றும் இடஒதுக்கீடு விதிமுறைகளை மீறுதல் மற்றும் சிக்கல்கள் தொடர்பான சிறப்பு மாநாடு சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இம்மாநாட்டில் பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் பேசியதாவது:

நம் நாட்டில், பல்கலைக் கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம், ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆர்எஸ், எய்ம்ஸ், என்ஐடிஎஸ் போன்ற நிறுவனங்கள், தொழில் நுட்ப நிறுவனங்கள், மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், மேலாண்மை நிறுவனங்கள், கட்டிடக்கலை, வடிவமைப்பு, புள்ளியியல், கலை அறிவியல், சமூக அறிவியல் போன்ற கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு காட்டப்படுகிறது. ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மிகக் குறைவான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகின்றன. மும்பை, டெல்லி, சென்னையில் உள்ள ஐஐடியிலும் சாதிய பாகுபாடு காட்டப்படுகிறது.

மும்பை ஐஐடியில் உயர் சாதி மாணவர்கள் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவது. இது மட்டும் அல்லாமல் ஏழை எளிய மாணவர்களுக்கும் இதே நிலைதான். இதனால் 25 சதவீத மாணவர்கள் இந்த மன ரீதியான பாதிப்பில் இருக்கின்றனர். கல்வி கற்கின்ற உரிமை இருந்தும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இதேபோல நிலை நீடித்து வருகிறது. இன்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அவை பிரதிபலிக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அதனால் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சாதிய பாகுபாடுகளில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும்.

சட்ட முறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை கொண்டு வர வேண்டும். கடந்த 2012ம் ஆண்டில் இதற்கான ஒழுங்கு முறைகள் பல்கலைக் கழக மானியக் குழுவின் மூலம் கொண்டு வரப்பட்டது. அதை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக ஒரு குழுவை அமைத்து, சாதிய பாகுபாடுகள் வரும் போது, அதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் போதும் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி என்று குறிக்கப்படுவது இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமே தவிர பாகுபாடு பார்க்க அல்ல என்பதை மாணவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை: யுஜிசி முன்னாள் தலைவர் கருத்து appeared first on Dinakaran.

Tags : UGC ,Chennai ,Union Government ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...