×

காற்றாலை ஆக்கிரமிப்பு பிரச்னை அதிமுக மாஜி எம்எல்ஏ மீது ஊழியர்கள் சரமாரி தாக்குதல்

ஓட்டப்பிடாரம்: தனியார் காற்றாலை ஆக்கிரமிப்பு பிரச்னை தொடர்பாக ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் சரமாரியாக தாக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜ். இவர், அமமுகவில் இணைந்ததால் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதையடுத்து இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது இவர் அமமுகவில் மாநில நிர்வாகியாக உள்ளார். இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம் – பாளையங்கோட்டை சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்தது.

தற்போது அனுமதி காலம் முடிந்ததால் குவாரி செயல்படவில்லை. அங்கு தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே தனியார் காற்றாலை நிறுவனம், ஓட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் அங்குள்ள பொதுப்பாதை, நீர்வழி பாதைகளை ஆக்கிரமித்து காற்றாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி மின்பாதை அமைக்கும் பணியில் தனியார் காற்றாலை நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதற்கு முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட உயர்அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து காற்றாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காற்றாலை நிறுவனம் பணிகளை மீண்டும் துரிதப்படுத்தியது. தகவல் அறிந்து முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ், நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று பணிகளை நிறுத்துமாறு கூறினார். அப்போது சைட் இன்ஜினியர் மற்றும் தொழிலாளர்கள், அவரை கீழே தள்ளி கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனியார் காற்றாலை நிறுவனத்தை சேர்ந்த ஹரி என்பவர், மாஜி எம்எல்ஏ சுந்தர்ராஜ் தரப்பினர் தன்னை தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post காற்றாலை ஆக்கிரமிப்பு பிரச்னை அதிமுக மாஜி எம்எல்ஏ மீது ஊழியர்கள் சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : MLA ,Sunderraj Saramari ,Tutukudi ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...