×

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் அபாய விழிப்புணர்வு, ஒத்திகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு

சென்னை, செப். 3: புயல் அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடந்தது. சென்னையில் இருந்தவாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து மாவட்ட ஆட்சியர், பிற துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புயல் அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேற்று நடத்தப்பட்டது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி, புயல் தொடர்பான ஒத்திகை பயிற்சியில் கலந்து கொண்டு, புயலின் தாக்கத்திற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார். இந்த ஒத்திகை பயிற்சியின்போது, காலை 9 மணிக்கு மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விஎச்எப் தொலைதொடர்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருவிகள் மூலமாக புயல் அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டது.

மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு படையின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து பாதிப்பிற்கு உள்ளாக கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பின்னர், புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ஒத்திகை பயிற்சியின் மூலம் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் காலங்களில் இணைந்து செயல்படும் முக்கிய துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் தயார் நிலை மதிப்பீடு செய்யப்பட்டதோடு, பேரிடர் நிகழ்வு, மீட்பு அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஒத்திகையின்போது வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் ராஜாராமன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கமாண்டன்ட் ஆதித்யகுமார், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குநர் ராமன், தேசிய பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு பேரிடர் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, முப்படையை சார்ந்த அலுவலர்களும் மற்றும் பேரிடர் மேலாண்மையில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தாம்பரம்: தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், அதிவிரைவு படையினர், வருவாய் துறையினர் ஆகியோர் இணைந்து, பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் பெரிய ஏரியில் நேற்று நடத்தினர். இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வெள்ள காலத்தில் எவ்வாறு பொதுமக்கள் மீட்கப்படுகின்றனர் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், மழை வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை படகுகள் மூலம் மீட்பது, வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகளை மீட்பது, குடும்பத்துடன் வீடுகளில் சிக்கி தவிப்பவர்களை எப்படி மீட்பது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் எவ்வாறு மருத்துவ உதவி வழங்கி அவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், தாம்பரம் தாசில்தார் கவிதா, தீயணைப்பு துறையினர், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரிடர் மீட்பு ஒத்திகையை பார்வையிட்டனர்.

விஷவாயு கசிந்தால் பாதுகாப்பது எப்படி?
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு துறை சார்பில் மழை வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் விஷவாயு கசிந்தால் அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் இரண்டு சக்கர வாகனங்கள், பல்வேறு தீயணைப்பு சாதனங்களுடன் வந்த 35 தீயணைப்பு வீரர்கள் பல்வேறு செயல்முறை மூலம் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் விளக்கி நடித்து காட்டினர். நிகழ்ச்சியில் மண்டல உதவி ஆணையர் ரவீந்திரன், செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், சுகாதார அதிகாரி லீனா மற்றும் கவுன்சிலர் சிவகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு குழு, காவல் துறையினர் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சி புதுவண்ணாரப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பொறுப்பு மண்டல அதிகாரி ராதாகிருஷ்ணன், வடக்கு மண்டல தீயணைப்பு துறை அதிகாரி லோகநாதன் பங்கேற்றனர்.

The post சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் அபாய விழிப்புணர்வு, ஒத்திகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Tiruvallur ,Minister ,KKSSR ,Ramachandran ,Nagapattinam ,Mayiladuthurai ,Tiruvallur Districts ,KKSSR Ramachandran ,
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...