×

முகையூர் வாஞ்சி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு இறுதி வாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு, செப். 3: செங்கல்பட்டு மாவட்டம் முகையூர் வாஞ்சி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடையாறு காந்தி நகரைச் சேர்ந்த எஸ்.மன்னார்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா முகையூர் கிராமத்தில் வாஞ்சி ஏரி உள்ளது. சுமார் 120 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த ஏரியை நம்பி 300 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த ஏரியை ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், ஏரியில் நீர் சேகரிப்பு குறைந்து அந்த கிராமம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே, வாஞ்சி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அனிதா, இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், 8 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று கூறி மன்னார்சாமி மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, செய்யூர் தாசில்தார் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறப்பு அரசு வழக்கறிஞர் அனிதா ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் போலீசுடன் கடந்த ஜூலை 31ம் தேதி சென்றபோது அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்துள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 21ம் தேதி அந்த கிராமத்தில் அமைதி குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு மேலும் ஒரு வாய்ப்பு தருகிறோம். நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி செப்டம்பர் 25ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post முகையூர் வாஞ்சி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு இறுதி வாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mukaiyur Vanchi Lake ,Madras High Court ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED தாசில்தார் பதவி உயர்வு விவகாரம் 3...