×

12 ஆண்டுக்கு பின் நடந்த தேர்தலில் அமோக வெற்றி சிங்கப்பூர் அதிபரானார் தமிழர் தர்மன்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 12 ஆண்டுக்குப் பின் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர் தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் வரும் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பிரதமர் லீ ஹசியன் லூங்கின் ஆளும் மக்களின் செயல் கட்சி ஆதரவுடன், இந்திய வம்சாவளியான இலங்கை தமிழர் தர்மன் சண்முகரத்னம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சீன வம்சாவளிகளான நிக் காக் சாங்க் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.

2011க்கு பிறகு, 12 ஆண்டுகள் கழித்து அதிபர் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 24.8 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து நள்ளிரவுக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 70.4 சதவீத வாக்குகளுடன் (17 லட்சத்து 46 ஆயிரத்து 427 வாக்குகள்) தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி பெற்றார். நிக் காக் சாங்க் 15.72 சதவீதம் மற்றும் டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

இதன் மூலம், சிங்கப்பூரின் 9வது அதிபராகவும், 3வது இந்திய வம்சாவளி அதிபராகவும் தர்மன் சண்முகரத்னம் அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அதிபர் தர்மன், ‘‘உங்கள் வாக்குகளுக்கு நான் தலைவணங்குகிறேன். இது வெறும் எனக்கான வாக்குகள் அல்ல, சிங்கப்பூரின் எதிர்காலம், தேச ஒருமைப்பாடு மற்றும் நம்பிக்கையின் எதிர்காலத்திற்கான வாக்குகள். எனக்கு வாக்களித்தவர்கள், எனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்து சிங்கப்பூர் மக்களையும் நான் மதிக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம்’’ என்றார்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் தர்மனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியா சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த, உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லூங் தனது வாழ்த்து செய்தியில், ‘‘சிங்கப்பூர் மக்கள் தர்மன் சண்முகரத்னத்தை எங்கள் அடுத்த அதிபராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். அவர், சிங்கப்பூர் நலனுக்காக அதிபரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றிய அதிக புரிதலை ஏற்படுத்துவார்’’ என்றார். இதற்கு முன், இந்திய வம்சாவளிகளான தமிழர் எஸ்.ஆர்.நாதன் எனப்படும் செல்லப்பன் ராமநாதன் 6வது அதிபராகவும் (1999 முதல் 2011ம் ஆண்டு வரை), கேரளாவின் தலச்சேரியை பூர்வீகமாக கொண்ட தேவன் நாயர் 3வது அதிபராகவும் (1981 முதல் 1985 வரை) இருந்தது குறிப்பிடத்தக்கது.

* உலக அரசியலில் இந்திய வம்சாவளிகள்
உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளிகள் பட்டியலில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முரத்னமும் தற்போது இணைந்துள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் துணை அதிபர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அயர்லாந்து பிரதமர் லியோ எரிக் வரத்கர், போர்ச்சுகல் பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டா, டிரினாட் மற்றும் டொபாகோவின் அதிபர் கிறிஸ்டியன் கார்லா கங்காலூ, மொரிஷியஸ் அதிபர் பிரித்விராஜ் சிங் ரூபன், கயானா அதிபர் முகமது இர்பான் அலி, செசல்ஸ் அதிபர் சந்திராக பிரசாத் உள்ளிட்டோர் இந்திய வம்சாவளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நாடுகளிலும் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளிகள் உள்ளனர்.

* யார் இந்த தர்மன்?
66 வயதாகும் தர்மன் சண்முகரத்னம், 1957ல் சிங்கப்பூரில் பிறந்தவர். இவரது தந்தை, இலங்கை தமிழரான கனரத்னம் சண்முகரத்னம் சிங்கப்பூரின் பிரபல நோயியல் மருத்துவராக இருந்தவர். மிகச்சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், கடந்த 2001ல் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். ஆளும் மக்களின் செயல் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். அதைத் தொடர்ந்து 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், 2011 முதல் 2019 வரை துணை பிரதமராகவும், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் அவர் மக்களின் செயல் கட்சியிலிருந்து விலகினார்.

The post 12 ஆண்டுக்கு பின் நடந்த தேர்தலில் அமோக வெற்றி சிங்கப்பூர் அதிபரானார் தமிழர் தர்மன்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamilar Dharman ,President ,Singapore ,Modi ,Tharman ,Shanmukaratnam ,
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...