×

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது: பாக்., இந்தியாவுக்கு தலா 1 புள்ளி

பல்லேகலே: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் ஏ பிரிவில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதிய லீக் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இலங்கையின் பல்லேகலே ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித், ஷுப்மன் கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்தியா 4.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

சிறிது நேர தாமதத்துக்குப் பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் ரோகித் 11 ரன், விராத் கோஹ்லி 4 ரன் எடுத்து ஷாகீன் ஷா அப்ரிடி வேகத்தில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினர். ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன், கில் 10 ரன் எடுத்து (32 பந்து, 1 பவுண்டரி) ஹரிஸ் ராவுப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 14.1 ஓவரில் 66 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், இஷான் கிஷன் – ஹர்திக் பாண்டியா இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இஷான் 52 பந்தில் அரை சதம் அடிக்க, ஹர்திக் 62 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்து அசத்தியது. சதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… இஷான் 82 ரன் (81 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் 87 ரன் (90 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.ஜடேஜா 14 ரன் எடுத்து ஷாகீன் அப்ரிடி வேகத்தில் ரிஸ்வான் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ் 4, ஜஸ்பிரித் பும்ரா 16 ரன் எடுத்து நசீம் ஷா வேகத்தில் அவுட்டாகினர்.
இந்தியா 48.5 ஓவரில் 266 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் 4 விக்கெட் கைப்பற்றினார். நசீம் ஷா, ஹரிஸ் ராவுப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி துரத்தலை தொடங்க இருந்த நிலையில் கனமழை கொட்டியதால் முடிவு இல்லாத போட்டியாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை நேபாள அணியுடன் மோதுகிறது.

The post மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது: பாக்., இந்தியாவுக்கு தலா 1 புள்ளி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,Pallekale ,Asia Cup ODI ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கு எதிரான போட்டியில்...