×

அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது தென்சென்னைக்கு நிகராக மாறுகிறது வடசென்னை: நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரம்

* சிறப்பு செய்தி
தென்சென்னைக்கு நிகராக வடசென்னையை மாற்றும் பணிக்கான புதிய திட்டங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்து திட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு காசு இல்லாதவனை கூட தொழிலதிபரா மாத்திருக்குனு பேச்சு மொழி இருக்கு. சென்னையில பளபளக்குற கலர் கலரான மால்களும், கட்டிடங்களும், வரலாற்று நினைவிடங்களும் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். சென்னை என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், போக்குவரத்து நெரிசல், சொகுசு கார்கள், ஐ.டி நிறுவனங்கள், மெட்ரோ ரயில்கள் தான். ஆனால் இவற்றுக்கு பின்னால் வடசென்னை ஒளிந்து கொண்டிருக்கிறது.

இப்பகுதியில் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதற்கான அடையாளமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வறுமையின் அடையாளமாக இருக்கும் மக்களை உள்ளடக்கியதாக உள்ளது. ‘சென்ன பட்டணம்’ என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இப்போதும் வடசென்னை தொகுதிக்குள் தான் உள்ளன. கால்பந்து விளையாட்டு, வடசென்னை இளைஞர்களின் உயிர்மூச்சு. கேரம் விளையாட்டில் அகில இந்திய அளவில் சாதனை படைத்தவர்கள் நிரம்பி வழியும் பகுதி. தென்சென்னை பகுதிகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த வடசென்னையின் சாலைகள் குண்டும் குழியுமாக, குப்பை கூளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. தென்சென்னை பகுதியில் சீரமைப்பு பணி வேகமாக நடந்து முடிந்த அளவுக்கு வடசென்னை இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நகரப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், இன்னும் வட சென்னை பகுதிகளான காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை.

திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதியில் வசிப்பவர்கள் சுகாதார கேட்டாலும், காற்று மாசாலும் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். வடசென்னை பகுதியை பொறுத்தவரை சாலை வசதி பெரும் சிக்கலாக உள்ளது. குறுகிய சாலையில் பயணம் செய்வது சவாலானது. இதனால் போக்குவரத்தில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது வடசென்னை பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இங்கு போதிய அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்புகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.

வடசென்னை மக்களின் நீண்ட கால கனவை நிஜமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வட சென்னை பகுதி மேம்பாட்டிற்காக வடசென்னையின் வளர்ச்சியை குறிவைத்து ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கி 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடசென்னையை ஒட்டுமொத்தமாக உருமாற்றம் விதமாக இந்த பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

தென்சென்னை அளவிற்கு அல்லது தென்சென்னையை விட சிறப்பாக சென்னையை வளர்க்கும் முடிவில் இந்த ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும ஆணையம் (சிஎம்டிஏ) சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதை தொடர்ந்து வடசென்னையில் வளர்ச்சி பற்றிய திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வடசென்னையின் வளர்ச்சி திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில், பெரம்பூர், செம்பியம், மதுரவாயல், கொரட்டூர், அயனாவரம், மாதவரம் மற்றும் சூரப்பேடு ஆகிய இடங்களில், 8 மாடிகளில் இருந்து, 35 தளங்கள் வரை வானளாவிய கட்டிடங்கள் உருவாக உள்ளன. இவை அனைத்தும் குடியிருப்பு வளாகங்களாக இருக்கும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பல மாடிக் கட்டிடக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 18 உயர்நிலை கட்டிடங்களில் இவையும் அரசு அனுமதிக்கு உள்ளன.

வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தால் இந்த பகுதியில் 35 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட உள்ளது. முன்பு 10 தளங்கள்வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. பெரம்பூர், மாதவரத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள காசிமேடு கடற்கரை மெரினாவுக்கு நிகராக நவீனப்படுத்தப்பட உள்ளது. காசிமேடு முதல் நெட்டுக்குப்பம் வரை உள்ள கடற்கரை இவ்வாறு அழகுப்படுத்தப்பட உள்ளது. வடசென்னையில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆரோக்கியம் முதல் விளையாட்டு, போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

விளையாட்டு மைதானங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது. மெரினாவை போல விதவிதமான உணவுகள், குதிரை சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கும் வர இருக்கிறது. நீரூற்று நடைபாதைகள், மீன் சிலை உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமான துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டமும் வட சென்னையில்தான் அமைய உள்ளது. மொத்தத்தில் வட சென்னை வளர்ந்த சென்னையாக விரைவில் மாறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

* விளையாட்டு வளாகம்
தண்டையார்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது. இந்த நவீன விளையாட்டு வளாகத்தில் குத்துச்சண்டை, கபடி, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தனி மைதானம் அமைக்கப்பட உள்ளது. 2 கபடி மைதானம், ஒரு சிலம்பம் மைதானம், 2 குத்துச்சண்டை மைதானங்கள், இறகுப்பந்து, கூடைப்பந்து, ஓடுதளம், ஸ்கேட்டிங், கைப்பந்து, கிரிக்கெட் பயிற்சி, ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், பெண்களுக்கான உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடம், விளையாட்டு கருவிகள் மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு இது அமைகிறது.

The post அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது தென்சென்னைக்கு நிகராக மாறுகிறது வடசென்னை: நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Densennai ,Tamil Nadu Government ,Vadashenna ,Densen ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...