×

ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் 15 திருக்கோயில்களில் பக்தர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் (Master Plan) கீழ், ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் 15 திருக்கோயில்களில் பக்தர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் இன்று (01.09.2023) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், 2021 – 2022, 2022 – 2023 மற்றும் 2023 – 2024 ம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 26 – வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்ற திருக்கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் 2021 – 2022 ஆம் ஆண்டில் 10 திருக்கோயில்களில் பெருந்திட்ட பணிகள் (Master Plan) தொடங்கப்பட்டன. ரூ.170.11 கோடி மதிப்பீட்டில் பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், ரூ.306.35 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ரூ.159.83 கோடி மதிப்பீட்டில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், ரூ.78.20 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,

ரூ.103. 70 கோடி மதிப்பீட்டில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ரூ.64.65 கோடி மதிப்பீட்டில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், ரூ.99.98 கோடி மதிப்பீட்டில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ரூ.78.55 கோடி மதிப்பீட்டில் திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயில், ரூ.68.30 கோடி மதிப்பீட்டில் இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ரூ.1,230 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2023 – 2024 ஆம் ஆண்டு அறிவிப்புகளின்படி, அழகர்கோயில், கள்ளழகர் திருக்கோயில், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மேல்மலையனூர், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்,

திருச்சி மாவட்டம், குமாரவயலூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ரூ. 200 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த பெருந்திட்டப் (Master Plan) பணிகள் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. சிறப்பு திட்டங்களாக நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் தமிழ்மூதாட்டி ஔவையாருக்கு ரூ.18 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம், மயிலாப்பூரில் ரூ.28.76 கோடி மதிப்பீட்டில் ஆன்மிக கலாச்சாரம் மையம், மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றபின் புதியதாக 3 தங்கத்தேர்களும், 5 வெள்ளித் தேர்களும், 51 புதிய மரத்தேர்கள் செய்யும் பணிகளும், 13 மரத்தேர்களை மராமத்து செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவற்றின் தற்போதைய நிலை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பக்தர்கள் மற்றும் முதியோர்கள் மலைக் கோயில்களுக்கு செல்ல வசதியாக ரோப் கார் மற்றும் தானியங்கி லிப்ட் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு வருகின்றன. கரூர், அருள்மிகு அய்யர் மலை திருக்கோயில், சோளிங்கர் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஆகியவற்றிக்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அனுவாவி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி – இடும்பன் மலை ஆகிய திருக்கோயில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு – கோரக்குட்டை ஆகிய மலைக் கோயில்களில் ரோப்கார் அமைப்பதற்கு சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. அதேபோல் மருதமலை மற்றும் சுவாமிமலை திருக்கோயில்களுக்கு தானியங்கி மின்தூக்கி (Lift) அமைப்பதற்குண்டான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு, மருதமலையில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தானியங்கி லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுவாமி மலையில் சுமார் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தானியங்கி லிப்ட் அமைக்கப்படும். திருக்குளங்களை பொறுத்தளவில் 2021 – 2022 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி மாதவரம், அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயிலுக்கு ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் புதிய திருக்குளம் அமைக்கும் பணிகளும், 35 திருக்குளங்களை ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளும்,

2022 – 2023 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, ரூ.2 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திருக்குளங்கள் ஏற்படுத்தும் பணிகளும், ரூ.35 கோடி மதிப்பீட்டில் 40 திருக்குளங்களை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், 2023 – 2024 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி ரூ.25.44 கோடி மதிப்பீட்டில் 45 திருக்குளங்களை மேம்படுத்தும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் உலோகத் திருமேனிகளை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பறைகள் (Strong Rooms) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 1,833 உலோகத் திருமேனி பாதுகாப்பறைகள் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு 1,737 பாதுகாப்பறைகள் கட்டிட பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 139 பணிகள் நிறைவுற்றுள்ளன. 927 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதர பணிகள் தொடங்கப்படவுள்ளன.

முதலமைச்சர், 1,000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 – 2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023 – 24 ஆம் ஆண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி 2022 – 2023 ஆம் ஆண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான திருக்கோயில்களும், 2023 – 24 ஆம் ஆண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 திருக்கோயில்களும் அரசு மானியம், திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுள் 4 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா முடிவுற்றுள்ளது. 6 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழாவிற்கான நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற திருக்கோயில்களுக்கும் 2,500 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியிலே இருக்கின்ற திருக்கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ. 100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஒருகால பூஜை திட்டத்தில் திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டு வந்த வைப்பு நிதி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டு, இதுவரை 15,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இந்தாண்டு இத்திட்டத்திற்காக 2,000 திருக்கோயில்களை தேர்வு செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,000 இவ்வரசு பொறுப்பேற்றபின் முதன்முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
பருவதமலை, போளூர், வெள்ளியங்கிரி, சதுரகிரி, கண்ணகி கோயில் ஆகியவற்றிற்கு மலைப்பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் குறித்தும், அட்டவீராட்டணம் தலங்கள், நவகிரக கோயில்கள், நவகயிலாய கோயில்கள், பஞ்ச சபை கோயில்கள் மற்றும் 12 சிவாலய ஓட்ட திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் 925 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. வருகின்ற செப்டம்பர் 3 ஆம் தேதி 38 திருக்கோயில்களிலும், 4 ஆம் தேதி 13 திருக்கோயில்களிலும் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.5,169 கோடி மதிப்பீட்டிலான 5721 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இப்படி திருக்கோயில்களின் நலன்களை காத்திடும் வகையிலும், இறையன்பர்கள் பயன்பெறும் வகையிலும் ஒவ்வொரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதனால் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தலைமைப் பொறியாளர் சி.இசையரசன், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் 15 திருக்கோயில்களில் பக்தர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : 15 Thirugoyils ,Minister ,Segarbabu ,Chennai ,15 Thirukoils ,Thirukoyils ,Minister Segarbabu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...