×

‘இந்தியா’ கூட்டணியின் வலுவான வியூகத்தால் தடுமாறும் பாஜக; பொது சிவில் சட்டம், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு, ஒரே நாடு – ஒரே தேர்தல்?.. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பின் பரபரப்பு பின்னணி

 

புதுடெல்லி: ‘இந்தியா’ கூட்டணியின் வலுவான வியூகத்தால் ஆளும் பாஜக தடுமாறி வரும் நிலையில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்கும் 5 மாநில தேர்தல், எதிர்கட்சிகளின் வலுவான ‘இந்தியா’ கூட்டணி ஆகியவற்றால் ஒன்றிய பாஜக அரசு தடுமாறி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17வது மக்களவையின் 13வது அமர்வு மற்றும் ராஜ்யசபாவின் 261வது அமர்வு) வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடக்கும். சுதந்திர இந்தியாவின் 75ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்த சிறப்பு கூட்டத் ெதாடரில் பயனுள்ள விவாதங்களை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்த தேதி ெவளியிடப்பட்டுள்ளதே தவிர, எதற்காக இந்த சிறப்பு அமர்வு என்பதை ஒன்றிய அரசு விளக்கவில்லை. அதனால் பல்ேவறு வியூகங்கள் கிளம்பி வருகின்றன. வரும் 9, 10ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ஐந்து நாள் சிறப்பு அமர்வு நடைபெறும். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் காரணமாக வழக்கமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தாமதமாகலாம் என்பதால், இந்த சிறப்பு கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலுக்கான நோக்கம் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒன்றிய பாஜக அரசு சர்வதேச அளவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெற்ற சுதந்திர தினத்தின் பொன்விழா காலகட்டத்தின் போது நடத்தப்பட்ட சிறப்பு அமர்வுக்கு இணையாக, 75வது ஆண்டை மையப்படுத்தி இந்த அமர்வு அமையலாம் என்று சில தலைவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‘அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை, வரும் டிசம்பரில் முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம். ஒன்றிணைந்த எதிர்கட்சிகளுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தும் வகையில் புதிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடலாம். குறிப்பாக பொது சிவில் சட்டம், மகளிர் இடஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்கட்சிகள் எதிர்க்க இயலாது. அதேபோல் பொது சிவில் சட்ட மசோதாவிலும் எதிர்கட்சிகள் இருவித கருத்துகளை கொண்டுள்ளன. ஏற்கனவே பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் முன்கூட்டியே லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கூறினாலும் கூட, அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்பது கேள்வியாக உள்ளது. மேற்கண்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட, தேர்தலுக்கு முன் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எப்படியாகிலும் எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் வியூகங்களை திசை திருப்பவே இந்த சிறப்பு கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டிருக்கலாம்’ என்று கூறினர்.

இரண்டு கட்டமாக பேரவை தேர்தல்
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோல் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒரே நாடு – ஒரே தேர்தல் சட்டம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டால், மக்களவை தேர்தல் முன்னதாக பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடக்கும் மாநிலங்களின் சட்டசபையை முன்கூட்டியே கலைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளது. அதனால் நாடு முழுவதும் சட்டசபை தேர்தல்களை இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக லோக்சபா தேர்தலுடன் 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படலாம்.

இவ்வாறு நடந்தால், ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை தேர்தல் நடக்கும். இரண்டாம் கட்ட தேர்தல் பட்டியல், அசாம், பீகார், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, டெல்லி, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன. சட்ட ஆணைய பரிந்துரையின்படி, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தலை நடத்த முடியாவிட்டாலும் கூட, ஒரு வருடத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இன்றைய சூழலில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் சட்டசபையின் பதவிக்காலம் வெவ்வேறு மாதங்களில் முடிவடைகிறது. இதனால், ஆண்டு முழுவதும் தேர்தல் நடக்கும் சூழல் நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

பாஜகவுக்கு சாதகம், பாதகம் எது?
ஒரே நாடு – ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய பிறகு, நாட்டின் மொத்த மாநிலங்களில் பாதி மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்ற வேண்டும். அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். தொடர்ந்து அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும். இன்றைய நிலையில் உத்தரப்பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பாஜக ஆட்சியும், 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாஜக கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 15 மாநிலங்களில் ஒரே நாடு – ஒரே தேர்தல் தொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள முடியும். அதனால் வரும் சிறப்பு கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜக அரசு, ஒரே நாடு – ஒரே தேர்தல் மசோதாவை கொண்டு வரலாம் என்கின்றனர். அவ்வாறு கொண்டு வரப்பட்டால், பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களின் ஆட்சியை கலைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

திடீர் அறிவிப்பு குறித்து ஆலோசனை
மும்பையின் கிராண்ட் ஹயாட் ஓட்டலில் எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். லோக்சபா தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்படலாம் என்பதால், மாநிலம் வாரியாக ெதாகுதி பங்கீடு குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த திடீர் அறிவிப்பு வெளியானதால், இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இது தவிர, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் எந்ததெந்த கட்சிகளின் தலைவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், தேசிய மற்றும் மாநில அளவில் இரண்டு வகையான ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கலைப்பு?
மோடி அரசின் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஜி-20 மாநாடு, சந்திரயான் – 3 வெற்றி, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதம் நடத்தப்படலாம் என்றும், அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு பொதுமக்கள் முன்னிலையில் விளம்பரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இம்மாதம் நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடரானது, 17வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் என்பதால், அதன்பின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள ஒன்றிய அரசு முடிவெடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் சட்டத்தில் திருத்தம்
மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு – ஒரே தேர்தல்) நடத்த வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பாஜக கூறி வருகிறது. பிரதமர் மோடியும் அதே கருத்தை வலியுறுத்தி ேபசிவருகிறார். அவ்வாறு ஒரே நேரத்தில் மக்களவை – சட்டப் பேரவைகளுக்கு தேர்தலை நடத்த வேண்டுமானால், அரசியலமைப்பின் ஐந்து பிரிவுகளைத் திருத்தம் செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 83, 85, 172, 174 மற்றும் 356 ஆகிய பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும். இது தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-151 இல் திருத்தம் செய்ய வேண்டும். பல மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். உண்மையில் அது சாத்தியமா? என்பதும் கேள்வியாக உள்ளது.

ஒரே நாடு – ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றினாலும் கூட, மாநில சட்டப் பேரவைகளில் இருக்கும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாலும் நிறைவேற்ற வேண்டும். மோடி அரசின் இந்த திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து அரசியலமைப்பு விகாரங்கள் குறித்து விவாதிக்கும் நிபுணர் ஞானந்த் சிங் கூறுகையில், ‘ஒரே நாடு-ஒரே தேர்தல் அமல்படுத்த வேண்டுமானால், சட்டப்பிரிவு-356 இல் திருத்தம் கொண்டு வரவேண்டும். அனைத்து மாநில சட்டப் பேரவைகளையும் கலைத்துவிட்டு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அரசியலமைப்புத் திருத்தம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆளுங்கட்சியுடன் மற்றக் கட்சிகள் ஒத்துப் போனால் மட்டுமே சாத்தியம்’ என்றார்.

சட்ட ஆணையத்தின் பரிந்துரை
ஒரே நேரத்தில் மக்களவை – சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டால், இரண்டு வகையான அரசியலமைப்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? அடுத்து ஆட்சி காலம் நிறைவடையாமல் முன்கூட்டியே ஆட்சி கவிழ்ந்தால், ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி நடத்த முடியும்? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் தேசிய சட்ட ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தேர்தலில் ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத பட்சத்தில், மிகப்பெரிய கட்சி அல்லது கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசு தலைவர் அல்லது ஆளுநர் அழைக்க வேண்டும்.

அப்படியும் ஆட்சியமைக்க முடியாவிட்டால், இடைக்காலத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலில், எஞ்சியிருக்கும் காலத்திற்கு மட்டுமே அந்த அரசு செயல்பட முடியும். அவ்வாறு அமையும் அரசின் பதவிக்காலம் ஐந்தாண்டு காலமாக இருக்காது. இரண்டாவதாக, ஒரு அரசின் ஆட்சி காலம் முடிவதற்கு முன்பே பெரும்பான்மை பலத்திற்கான பிரச்னையை எதிர்கொண்டால், அந்த அரசை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமே அகற்ற வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. அதனால் லோக்சபா அல்லது சட்டசபை காலத்திற்கு முன்பே கலைக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘இந்தியா’ கூட்டணியின் வலுவான வியூகத்தால் தடுமாறும் பாஜக; பொது சிவில் சட்டம், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு, ஒரே நாடு – ஒரே தேர்தல்?.. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பின் பரபரப்பு பின்னணி appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,New Delhi ,18th ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...