×

காயல்பட்டினத்தில் பீடி இலை லோடுடன் லாரி சிக்கியது இலங்கைக்கு கடத்த முயற்சியா? விசாரணை

ஆறுமுகநேரி, செப். 1: காயல்பட்டினத்தில் பீடி இலை லோடுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்டதா? என சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் இரவு லாரியில் மர்ம பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் எஸ்ஐக்கள் தமிழ்ச்செல்வன், வேல்பாண்டி மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது தேங்காய் பண்டகசாலை, கொச்சையார் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு தார் பாய் மூடிய நிலையில் லோடுடன் ஒரு லாரி சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த போலீசார், லாரியை சோதனையிட்டனர். அப்போது கட்டுக்கட்டாக பீடி இலை பேக்கிங் செய்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் லாரி கதவுகள் அனைத்தும் பூட்டிய நிலையில் இருந்ததால் போலீசார் இரவு முழுவதும் அப்பகுதியில் பதுங்கியிருந்து கண்காணித்தனர். ஆனால் காலை வரை யாரும் அந்த வாகனத்திற்கு உரிமை கோரவில்லை. இதனால் லாரியை மெக்கானிக் உதவியுடன் திறந்து ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் நேற்று மதியம் சுங்கத்துறை உதவி ஆணையாளர் ராமகிருஷ்ணன், கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் வந்த குழுவினரிடம் லாரியை ஆறுமுகநேரி போலீசார் ஒப்படைத்தனர். கடந்த சில மாதங்களாக மஞ்சள், புகையிலை, கஞ்சா, பீடி இலை போன்ற பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். இந்த பீடி இலை கட்டுக்குள் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பது முழு சோதனைக்கு பிறகே தெரிய வரும். மேலும் இந்த பீடி இலை கட்டுகள், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்திலும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

The post காயல்பட்டினத்தில் பீடி இலை லோடுடன் லாரி சிக்கியது இலங்கைக்கு கடத்த முயற்சியா? விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kayalpattinam ,Sri Lanka ,Arumuganeri ,Kayalpatnam ,Dinakaran ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...