×

களிமண் விநாயகர் சிலைகள் மட்டுமே தயாரிக்க அனுமதி: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: மதுரை, வண்டியூரைச் சேர்ந்த அரசுபாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர். இதற்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யும் பொருட்கள் சுலபமாக தண்ணீரில் கரைவதில்லை. இதனால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ரசாயன பொருட்கள் கலந்த விநாயகர் சிலைகளை செய்ய அனுமதி கிடையாது.

எனவே, ரசாயனம் கலந்த சிலைகளை தயாரிக்கவும், நீர் நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்க வேண்டும். களிமண் சிலைகளை செய்து பயன்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘ஒன்றிய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதை பின்பற்றியே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொள்கிறது.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளுக்கு மாசு மற்றும் பாதிப்பு ஏற்படாத வகையில், களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் ரசாயன பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதியில்லை’’ என்றார். இதையடுத்து, ‘‘சட்டத்தின்படியான அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகள் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என கூறிய நீதிபதிகள், ‘‘இதனால் யாராவது பாதிக்கும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி உரிய நிவாரணம் பெறலாம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post களிமண் விநாயகர் சிலைகள் மட்டுமே தயாரிக்க அனுமதி: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Igourd ,Madurai ,Ikort Madurai ,Vandyura ,Vinayakar Chadurthi ,Clay Dieger ,Igort branch ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை