×

முதல்வரின் காலை உணவு திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது: தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது என்று தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு சார்பாக காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது. இந்த காலை உணவு திட்டத்தில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் என பல்வேறு வகையான உணவுகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் 1,14,000 மாணவ, மாணவிகள் பயன்பெற்றனர். காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பள்ளிகளில் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தலாம் என்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு அதன்பேரில் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25ம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறை குறித்தும், உணவுகளை ஆய்வு செய்து அறிந்துகொள்வதற்காகவும் தெலங்கானாவில் இருந்து முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால் மற்றும் கிறிஸ்டினா, கருணா வக்காட்டி, ப்ரியங்கா வர்கீஸ், ஹொல்லிக்கேரி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சென்னை ராயபுரத்தில் உள்ள உருது தொடக்கப் பள்ளிக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.அவர்கள், தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது என்று தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் இளம் பகவத் கூறுகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. பெற்றோர்களிடம் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலங்கானா அரசு சார்பில் இந்த திட்டம் குறித்து அறிந்து கொள்வதற்காக எங்களை தொடர்பு கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். இதேபோல் மற்ற மாநிலங்களில் இருந்து எங்களை தொடர்பு கொண்டாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

The post முதல்வரின் காலை உணவு திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது: தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : India ,Telangana state government ,Chennai ,Tamil Nadu ,CM ,
× RELATED தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு...