அண்ணாநகர்: க்ஷசென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவர் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், ‘‘பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருந்தேன். அப்போது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (37) என்பவரை சந்தித்து அரசு வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருகிறேன். மெட்ரோ நிறுவனத்தில் உள்ள அதிகாரிகள் எனக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்தார். இதை நம்பி ரூ.8 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அவர் சொன்னபடி மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தராமல் ஏமாற்றிவந்தார். இது சம்பந்தமாக சீனிவாசனிடம் பலமுறை கேட்டபோது, வேலை வாங்கி தருகிறேன் என்று தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், சீனிவாசன் திடீரென தலைமறைவாகிவிட்டார். எனவே, அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்’’ தெரிவித்திருந்தார். புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து, சீனிவாசனை தேடி சென்றபோது, அவரது வீடு பூட்டியிருந்தது. சீனிவாசன் செல்போன் நம்பரை டவர் மூலம் கண்காணித்தபோது மும்பையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கண்காணித்தபோது, நேற்று முன்தினம் அவரது செல்போன் நம்பர் சென்னை சைதாப்பேட்டை பகுதியை காண்பித்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் அங்கு சென்று பதுங்கியிருந்த சீனிவாசனை கைது செய்தனர்.
The post மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.