×

மழையின்மையால் நிலக்கடலை விளைச்சல் கடும் சரிவு

க.பரமத்தி,ஆக.31: க.பரமத்தி ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்மையால் நிலக்கடலை விளைச்சல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்டு 30 ஊராட்சிகள் உள்ளன. இதில், அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர், தும்பிவாடி, விசுவநாதபுரி, தொக்குப்பட்டி, கூடலூர் கிழக்கு, மேற்கு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட குக்கிராமங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வந்தனர்.

இப்பகுதியில் விளையும் நிலக்கடலை இயற்கையிலேயே அதிக சுவையுடன் இருக்கும். எண்ணெய் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும் என்பதாலும் வியாபாரிகள் போட்டி போட்டு விவசாய நிலத்திலேயே கொள்முதல் செய்வது வழக்கம். இப்போதோ நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. தற்போது நான்கில் ஒரு பங்கு நிலக்கடலை விவசாயம் நடக்கிறது. காரணம் போதிய மழையில்லாமல் நிலத்தடி நீர் மட்டம் அகல பாதாளத்திற்கு சென்றதாலும், நிலக்கடலை விவசாயத்திற்கு உரிய ஊக்குவிப்பு இல்லாததாலும், ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் விவசாய பரப்பு குறைந்து வருகிறது. ஆண்டு தோறும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நிலக்கடலை விதைப்பு செய்யும் விவசாயிகள் தற்போது விதைப்பு பணிகளை செய்ய முன் வரவில்லை.

கடந்த 3 மாதத்திற்கு முன் இயற்கையை நம்பி சாகுபடி செய்த நிலக்கடலை பயிர், நீரின்றி கருகிப் போனது. ஒன்றிய, ஊராட்சி பகுதிகளில் தப்பிய நிலங்களில் தற்போது நிலக்கடலை பறிக்கும் பணி தொடங்கி நிறைவடைந்தது. விவசாயிகளின் நிலக்கடலைக்கு இந்த ஆண்டிலாவது உரிய விலை கிடைக்குமா? எனற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

The post மழையின்மையால் நிலக்கடலை விளைச்சல் கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Paramathi ,Paramathi Union ,
× RELATED கரூர் கொங்கு கல்லூரியில் பொங்கல் தின விழா