×

3 அமைச்சர்களை தொடர்ந்து ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வருகிறது: மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய் துறை அமைச்சராகவும் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள், முகாந்திரம் இல்லாததால் ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்து 2012ம் ஆண்டில் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கப்போவதாக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன் வந்து மேல்முறையீடு செய்து விசாரணைக்கு எடுத்த நிலையில் தற்போது நான்காவதாக அதிமுகவில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக பதிவிடப்பட்டுள்ளது.

The post 3 அமைச்சர்களை தொடர்ந்து ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வருகிறது: மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் appeared first on Dinakaran.

Tags : Justice ,Anand Venkatesh ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneer Selvath ,Judge ,Dinakaran ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்