கோபி: தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவது யார்? என்று அண்ணாமலை, சீமான் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக பாஜ தலைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய சீமான், ‘ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்’ என்று தெரிவித்தார். இந்நிலையில், கோவையில் நேற்று முன்தினம் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களை சந்தித்தார். அப்போது மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக சீமான் தெரிவித்துள்ளாரே? என்று கேட்டதற்கு, அவர் எங்குவேண்டும் என்றாலும் போட்டியிடட்டும். அவர் என்ன போட்டியிட்டு தோற்கதானே போறாரு. வாய் இருக்குனு பேசுறாரு’ என்று தெரிவித்தார்.
இந்த சூழலில், ஈரோடு மாவட்டம் கோபியில் கோபி, பவானி, பவானிசாகர், அந்தியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்று போயிடுவேன் என்று கூறுகிறார்களே, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவாரா? இல்ல பாஜ வெற்றி பெறுமா? நான் துணிந்து தனியாக நிற்பேன். பாஜவால் தமிழ்நாட்டில் தனியாக நிற்க முடியுமா? 10 ஆண்டுகள் ஆண்டுட்டீங்க.
பெரிய கட்சினு சொல்றீங்க. வாங்க தனியா நிற்போம். என்னைவிட ஒரு சதவீத வாக்கு அதிகமாக வாங்கி காட்டுங்க. எதுக்கு வெட்டி பேச்சு. நடையாய் நடந்து எடப்பாடி வீட்டில்தான் போய் அவரது முதுக்கு பின்னாடிதான் நிற்க போறீர்கள். நான் 40 இடத்திலும் போட்டி போடுவேன். நீங்கள் எத்தனை இடத்தில் போட்டியிடுவீர்கள். வேட்பாளர்கள் வைத்து உள்ளீர்களா? அப்படி ஒரு வேளை வேட்பாளர்களை நிறுத்த முயன்றால், அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளுமா? அதிகபட்சமாக 7 அல்லது 8 தொகுதிகளில் போட்டியிடுவீர்கள். அதுவும் அவரிடம் 7, 8 தடவ நடையாய் நடந்து வாங்கணும். அதுவே அவரு கொடுப்பாருணு யோசிக்கணும். கெஞ்சி வாங்கணும். பாஜவுக்கு கொடுக்குற சீட் எல்லாம் வேஸ்ட்தான். பாஜவை பொருத்தவரை எத்தனை இடங்களில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது.
சமையல் எரிவாயு விலையை 200 ரூபாயை குறைத்துள்ளது வரும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாகத்தான். அதேநேரத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், பால் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு உள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பிரதமர் பெயரிட்டுள்ளார். ஒரு கிரகத்தை (பூமி) அழித்து விட்டார்கள். அடுத்த கிரகத்தை அழிக்க பாஜவினர் தயாராகிவிட்டனர். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
The post சீமான் எங்க நின்னாலும் தோல்விதான் – அண்ணாமலை; அண்ணாமலை எங்க நின்னாலும் வெற்றி பெறுவாரா – சீமான்: அதிமுக முதுகுக்கு பின்னாடி நிற்கும் பாஜவுக்கு எதற்கு வெட்டி பேச்சு என கடும் விமர்சனம் appeared first on Dinakaran.
