×

வெல்டிங் செய்தபோது விபத்து காஸ் டேங்கர் லாரி வெடித்து தொழிலாளி பலி

மதுக்கரை: கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் இருந்து போடிபாளையம் செல்லும் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி வெல்டிங் சர்வீஸ் செய்யும் ஒர்க் ஷாப் உள்ளது. கோவை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், ஒரு பழைய காஸ் டேங்கர் லாரியை வாங்கி அதனை தண்ணீர் லாரியாக மாற்றுவதற்காக இந்த ஒர்க் ஷாப்பில் நேற்று இரவு விட்டிருந்தார். அங்கு வேலை செய்யும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் (38), ரவி (20) ஆகியோர் டேங்கர் லாரியின் மேல் உள்ள மூடியை திறப்பதற்காக இன்று வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத வகையில் டேங்கர் லாரி வெடித்து தீ பிடித்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வெடிகுண்டு தான் வெடித்து விட்டது என பயந்து நடுங்கினர். இதில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரவி, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டேங்கர் லாரி வெடித்ததால் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதையறிந்து வந்த மதுக்கரை இன்ஸ்பெக்டர் வைரம் அளித்த தகவலின்பேரில் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ‘‘கார்த்திகேயன் வாங்கிய லாரி டேங்கரில் வேதிப்பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். லாரி டேங்கர் மூடியில் வெல்டிங் விட்டு போயிருந்தால் அதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் இன்று ஈடுபட்டுள்ளனர். வெல்டிங் வைத்தபோது டேங்கரில் இருந்த வேதிப்பொருட்கள் இருந்ததால் லாரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதில் வக்கீல் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

 

The post வெல்டிங் செய்தபோது விபத்து காஸ் டேங்கர் லாரி வெடித்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Malumichambatti ,Coimbatore ,Bodipalayam ,Shanmugam ,Dinakaran ,
× RELATED மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற பீடா கடை அதிபர் கைது