×

திருவண்ணாமலையில் சீருடை பணியாளர் தேர்வு; வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி அதிரடி கைது: உடந்தையாக இருந்த 2 எஸ்ஐ, டாக்டரும் சிக்கினர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சீருடை பணியாளர் தேர்வில் வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது எஸ்.ஐ கணவர், மற்றொரு எஸ்.ஐ, டாக்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் எஸ்ஐ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த 26ம் தேதி மாநிலம் முழுவதும் நடந்தது. அதன்படி திருவண்ணாமலையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய லாவண்யா(23) என்பவர், தேர்வு தொடங்கி நடந்து கொண்டிருந்தபோது, கழிவறை செல்வதாக சொல்லிவிட்டு சென்றவர், மீண்டும் திரும்பி வர தாமதம் ஆகியுள்ளது. எனவே அறை கண்காணிப்பாளர் விசாரித்துள்ளார்.

அப்போது, லாவண்யா கையோடு வினாத்தாளையும் கழிவறைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும், அவர் தேர்வு எழுதிய இருக்கையின் கீழ் சில துண்டு தாள்கள் இருந்ததுள்ளது. எனவே பிட் அடித்ததாகக்கூறி அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்த ஐஜி சத்யபிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், தேர்வு மையத்திற்கு லாவண்யா செல்போன் கொண்டு சென்றதும் அதை பயன்படுத்தி வினாத்தாளை போட்டோ எடுத்து வெளியே அனுப்பி அதன் மூலம் விடைகளை பெற்று பூர்த்தி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டிற்கு எஸ்ஐயான அவரது கணவர் சுமன் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, லாவண்யா, எஸ்ஐ சுமன் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை எஸ்ஐ சிவக்குமார் மற்றும் செங்கத்தைச் சேர்ந்த டாக்டர் பிரவீன்குமார் ஆகியோரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு, அதற்கான விடைகளை கூகுளில் தேடி சரியான பதில்களை வாட்ஸ் அப்பில் மீண்டும் லாவண்யாவுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக எஸ்ஐ சிவகுமார் மற்றும் செங்கத்தை சேர்ந்த டாக்டர் பிரவீன் குமார் ஆகியோரையும் நேற்றிரவு எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தேர்வில் பிட் அடித்து விதிமீறலில் ஈடுபட்டதாக வெளியேற்றப்பட்ட லாவண்யாவின் கணவர் சுமன், சென்னையில் எஸ்ஐ ஆக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இவரும் துறையின் முறையான அனுமதி பெறாமல் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் எஸ்ஐ பணிக்கான போட்டித் தேர்வு எழுதி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் எதற்காக தேர்வு எழுதினார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடுக்கு சுமனின் சகோதரியான திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாவும் உதவினாரா என்றும் விசாரணை நடக்கிறது.

The post திருவண்ணாமலையில் சீருடை பணியாளர் தேர்வு; வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி அதிரடி கைது: உடந்தையாக இருந்த 2 எஸ்ஐ, டாக்டரும் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalayas ,Tiruvandamalai ,WhatsUp ,
× RELATED விழுப்புரம் மாவட்ட தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.26.50 லட்சம் மோசடி